Doctor Vikatan: எனக்கு சிறுநீரைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இது நோயின் அறிகுறியா? நான் தினமும் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன். ஒரு லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் குடிப்பது சரியானதா?
-Siva Kumar, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி

சிறுநீரகப் பையின் முழுமையான கொள்ளளவு என்பது வயதுக்கேற்ப மாறுபடும். அதில் மாறுதல் ஏற்படும்போது சிலருக்கு சிறுநீரைத் தக்கவைத்துக்கொள்வது சிரமமாகலாம். இதை சிறுநீரை கட்டுப்படுத்த இயலாத நிலை (Urinary incontinence) என்று சொல்வோம்.
40 வயதைக் கடந்த சில ஆண்களுக்கும், கர்ப்பப்பை இறக்க பாதிப்பு போன்று கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் உள்ள சில பெண்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். நரம்பு தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும் இந்த பாதிப்பு வரலாம்.
மருத்துவரை அணுகி பெரிய பாதிப்பு இல்லை என உறுதியானால், சாதாரண பயிற்சிகளின் மூலமே இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியும். சிலருக்கு சிறுநீர் கழித்த பிறகும், சிறுநீர்ப் பையில் இன்னும் சிறிது சிறுநீர் மிச்சமிருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். சிறுநீர்ப்பை தொடர்பான வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதையும் செக் செய்ய வேண்டும்.
உங்களுக்கு சிறுநீரகங்களில் எந்தப் பிரச்னையும் இல்லை என்ற நிலையில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதில் பாதிப்பிருக்காது. காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என்றெல்லாம் எதுவும் கிடையாது. ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதைவிடவும், நாள் முழுவதும் நம் உடல் நீர்வறட்சியின்றி இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான் சிறந்தது.
உங்களுக்கு சிறுநீரக பாதிப்போ, ரத்த அழுத்தமோ, நீரிழிவோ, இதயநோய்களோ, கணைய பாதிப்போ இருந்தால் ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது. இந்தப் பிரச்னைகள் உள்ளவர்கள் இப்படி ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்தால் தலைச்சுற்றலோ, மயக்கமோ வரலாம்.

சிறுநீரைக் கட்டுப்படுத்த இயலாத பிரச்னை குறித்து நீங்கள் சிறுநீரகவியல் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கமுள்ள நீங்கள் முழு உடல் பரிசோதனை செய்துபார்த்துவிட்டு, பிரச்னைகள் இல்லை என உறுதியானால் அதைத் தொடரலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானதா?