Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக தைராய்டு பாதிப்பு உள்ளது. உடல் பருமனால் அவதிப்படுகிறேன். வொர்க் அவுட், உணவுக்கட்டுப்பாடு என முயற்சி செய்தும் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை. தைராய்டு இருந்தால் உடல் எடையைக் குறைப்பது கடினம் என்பது உண்மையா? நான் எந்த மாதிரியான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
தைராய்டு அல்லது பிசிஓடி பிரச்னை உள்ளவர்களுக்கு எடையைக் குறைப்பது சாத்தியமே இல்லையா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. அதற்கு ஓரளவு வாய்ப்பிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் வொர்க் அவுட்டை பொறுத்தவரை ரெசிஸ்டன்ஸ் டிரெயினிங் செய்வதன் மூலம் தைராய்டு மற்றும் பிசிஓடி பாதிப்பு உள்ளவர்களாலும் எடையை நன்றாகவே குறைக்க முடியும். கூடவே சரியான உணவுப்பழக்கத்தையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
தைராய்டும் பிசிஓடியும் லைஃப்ஸ்டைலுடன் தொடர்புடைய பிரச்னைகள். ரெசிஸ்டன்ட்ஸ் டிரெயினிங்கும் சரியான உணவுப்பழக்கமும் எடைக்குறைப்பில் 100 சதவிகிதப் பலனைத் தருவதோடு மட்டுமன்றி, இந்தப் பிரச்னைகள் தீவிரமடையாமல் கட்டுக்குள் இருக்கவும் உதவும்.
சரியான ஃபிட்னெஸ் ஆலோசகரை சந்தித்து ரெசிஸ்டன்ஸ் பயிற்சிகள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் பயிற்சிகள் உங்கள் தசைகளின் வலிமையை அதிகரித்து, உடல் எடை குறைந்து சரியான வடிவத்துக்குக் கொண்டு வர உதவும்.
தைராய்டும் பிசிஓடி-யும் உள்ள எத்தனையோ பெண்கள் ரெசிஸ்டன்ஸ் டிரெயினிங் மற்றும் உணவுப்பழக்கம் மூலமாக எடையைக் குறைத்ததை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். மகப்பேறு மருத்துவர்களிடம் இது குறித்துப் பேசும்போது அவர்கள் வலியுறுத்துவதும் இவற்றையே.... ஒருவேளை ஏற்கெனவே இந்த விஷயங்களைப் பின்பற்றி வருகிறீர்கள், ஆனாலும் எடை குறையவில்லை என்றால் நீங்கள் உடற்பயிற்சியை சரியாகச் செய்யவில்லை என அர்த்தம்.

எனவே எடைக்குறைப்பு முயற்சியைக் கைவிட்டவர்களின் ஆலோசனையையோ வேறு யாரின் பேச்சையோ கேட்டுக்கொண்டு நம்பிக்கையை இழக்காதீர்கள். உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் இரண்டையும் சரியான நிபுணர்களின் வழிகாட்டுதலோடு மனம் தளராமல் பின்பற்றும்போது 100 சதவிகிதம் பலன் கிடைக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: தைராய்டு பாதிப்பு உள்ளவர்களால் எடையைக் குறைக்க முடியாது என்பது உண்மையா?