Doctor Vikatan: என் வயது 40. பித்தப்பையில் கற்கள் இருப்பது டெஸ்ட்டில் உறுதியாகி உள்ளது. எனக்கு அதற்கான அறிகுறியே தெரியவில்லை. வேறொரு மருத்துவப் பரிசோதனைக்குப் போனபோதுதான் பித்தப்பையில் கற்கள் இருப்பதாகச் சொன்னார் மருத்துவர். அதை அப்படியே விட்டுவிடலாமா... அறுவை சிகிச்சை தேவைப்படுமா? பித்தப்பையையே நீக்க வேண்டி வருமா? அதனால் பாதிப்பு வராதா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கல்லீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் காவ்யா டெண்டுகுரி.

இன்று பெரும்பாலான மக்களுக்கு பித்தப்பை கற்கள் இருப்பதைப் பார்க்கிறோம். வயிற்றுவலி, காய்ச்சல் என அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்து, பித்தப்பைக் கற்களின் அளவு பெரிதாக இருக்கும் நிலையில், அறிகுறிகளையும் வைத்து பித்தப்பையை நீக்க வேண்டுமா என்று பரிந்துரைப்பார்.
பித்தப்பை கற்கள் பாதிக்க பல காரணங்கள் இருக்கலாம். பித்தநீர் சேர்ந்து கற்களாக மாறலாம். உணவுப்பழக்கமும் காரணமாகலாம். சிலர், வாழ்நாள் முழுவதும் பித்தப்பைக் கற்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கு அந்தக் கற்களின் அளவு சிறியதாக இருந்திருக்கும். அதற்கான அறிகுறியே தெரிந்திருக்காது. பித்தப்பைக் கற்கள் உள்ள எல்லோருக்கும் அறிகுறிகள் வெளிப்பட வேண்டும் என்ற அவசியமில்லை. அறிகுறிகளை உணர்வோர் மருத்துவரை அணுகலாம். அல்ட்ரா சவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் மூலம் கற்களின் அளவு பார்க்கப்பட்டு, அவை பெரிதாக இருந்தால் அறுவைசிகிச்சை செய்யப்படும். மிகச் சிறிய அறுவை சிகிச்சை அது.

பித்தப்பையை நீக்குவதால் ஒருவரது ஆரோக்கியம் எந்தவகையிலும் பாதிக்கப்படாது. அப்படி பித்தப்பை நீக்கும் அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டவர்கள், தங்களுக்கு வரும் பல பிரச்னைகளுக்கும் பித்தப்பை நீக்கியதைக் காரணமாகத் தொடர்புபடுத்திப் பார்ப்பதுண்டு. அப்படியெல்லாம் இல்லை. பித்தப்பையின் வேலைகளை கல்லீரல் உள்ளிட்ட மற்ற உறுப்புகள் பார்த்துக் கொள்ளும் என்பதால் பயப்படத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: பித்தப் பையில் கற்கள்... அப்படியே விடுவது ஆபத்தா?