Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கை பொறுத்தவரை முதல் அட்டாக், இரண்டாவது அட்டாக் என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம். ஒருவருக்கு எத்தனை முறை ஹார்ட் அட்டாக் வரும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் முகமது இத்ரீஸ்.

இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். இந்த ரத்தக்குழாய்கள் எல்லோருக்கும் ஒன்றுபோல இருக்காது. உங்களுக்கு இருப்பது போல உங்கள் அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ இருக்காது.
உதாரணத்துக்கு உங்கள் கையின் மேல்பகுதியைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அங்கு தொடங்கி, விரல்கள் வரையில் ரத்தக்குழாய்கள் இருக்கும். அவற்றில் எதில் வேண்டுமானாலும் அடைப்பு வரலாம். கையில் மேல்பகுதியிலுள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பிருந்தால் அந்தப் பகுதியில் மட்டும் பாதிப்பு வரும். அதுவே விரல்களில் உள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால் விரல்களில் பாதிப்பு வரலாம். இதயமும் இப்படித்தான். அதில் எந்த இடத்தில் பாதிப்பிருக்கிறதோ, அதற்கேற்பவே அதன் தாக்கமும் வெளிப்படும்.
மேஜர் அட்டாக் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதயத்தின் தொடக்கத்தில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதையே மேஜர் அட்டாக் என்கிறோம். சிலருக்கு வேறு இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்த அறிகுறியே தெரிந்திருக்காது. வேறு ஏதேனும் விஷயத்துக்காக இசிஜி எடுக்கும்போதுதான், அவருக்கு ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்ததே தெரிய வரும். எனவே பிரதான ரத்தக்குழாய்களில் அடைப்பு வரும்போதுதான் அதன் விளைவாக வரும் ஹார்ட் அட்டாக்கை சம்பந்தப்பட்டவர் உணர்வார்.
இன்னும் சிலருக்கு நெஞ்சுவலி வந்திருக்கும். ஆனால் அதை புளித்த ஏப்பம், அஜீரணம், வாயுத்தொல்லை என நினைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்காமல் விட்டிருப்பார்கள். இவர்களுக்கும் பிற்காலத்தில் வேறு பிரச்னைகளுக்காக இசிஜியோ, எக்கோ பரிசோதனையோ மேற்கொள்ளும்போது தான் ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்த விஷயம் தெரியும். ஏற்கெனவே ஒருமுறை வந்திருக்கிறது, இரண்டு முறை வந்திருக்கிறது என மருத்துவர் சொல்லித்தான் சம்பந்தப்பட்ட நபருக்கே தெரிய வரும்.

இப்படி எத்தனை முறை ஹார்ட் அட்டாக் வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. பிரதான ரத்தக்குழாயில் அடைப்பு வந்து, அதன் தாக்கம் தீவிரமாக இருந்து, இதயம் முழுவதுமே செயலிழந்த நிலையில் அவர் உயிர் பிழைப்பதே சிரமமாகலாம். சிறிய அடைப்பு என்றால் பிழைத்துவிட வாய்ப்புகள் அதிகம். எனவே எத்தனை முறை என்பதைவிட, எந்த இடத்தில் பாதிப்பு வருகிறது என்பதுதான் முக்கியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: ஒருவருக்கு அதிகபட்சமாக எத்தனை முறை ஹார்ட் அட்டாக் வரும்?