பெண்கள் செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரித்தாலே தவறு என்கிற சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்றாலும், சமீப காலமாக திருமண உறவிலும், அதைத் தொடர்ந்த செக்ஷுவல் ரிலேஷன்ஷிப்பிலும் பெண்களுக்கும் விருப்பங்கள், தேர்வுகள், விலக்கங்கள் உண்டு என்பதை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பெண்கள் உரத்துச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அந்தக் குரல் பெண்கள் தரப்பில் பரவலாக ஒலிக்க வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

``ஒருபக்கம் டேட்டிங், மீட்டிங் என்று செக்ஷுவல் ரிலேஷன்ஷிப்பில் பெண்களுக்கும் விருப்பங்கள், தேர்வுகள் இருக்கின்றன என்று சமுதாயம் தெளிந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கமோ, செக்ஸ் என்பது கணவனை மகிழ்ச்சிப்படுத்துகிற விஷயம்; அதைச் செய்வது மனைவியின் கடமை என்று பல பெண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனக்கும் அது அவசியம் என்பதை அனைத்துப் பெண்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
இது, காம சூத்திரம் எழுதிய நாடு. கணவனைத் தேர்ந்தெடுக்கிற சுயம்வரம் என்கிற உரிமையும் நம்முடைய கலாசாரத்தில் இருந்திருக்கிறது. இடைப்பட்ட காலத்தில்தான், நம்முடைய சமூகம் பெண்களுக்கு பாலியல் விருப்பங்கள் கூடாது; அது பற்றி நினைக்கக்கூடாது; பேசக்கூடாது; அப்படிப் பேசுகிற பெண் ஒழுக்கம் கெட்டவள் என்று முத்திரை குத்த ஆரம்பித்தது. சமூகத்துக்கு ஒரு வார்த்தை... பெண்தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது இயற்கை. ஆனால், காதல் மற்றும் காமம் தொடர்பான தங்கள் விருப்பத்தையும், விருப்பமின்மையையும் தெரிவிக்கக்கூடாது என்பது இச்சமூகம் ஏற்றி வைத்திருக்கிற செயற்கை அடிமைத்தனம்.

நம் சினிமாக்களில் நாயகன்தான், நாயகியிடம் காதலை வெளிப்படுத்துவார். தன்னுடைய காதலை, விருப்பப்பட்டவனிடம் வெளிப்படுத்தும் பெண்ணை, நாயகன் நாணமில்லாத பெண் என்று விமர்சித்து விடுவார். இல்லையென்றால், சம்பந்தப்பட்ட பெண்ணே `வெட்கத்தை விட்டுச் சொல்றேன்' என்று கூறிவிட்டே தன் காதலைச் சொல்வார். இன்றைக்கோ, அபூர்வமாக சில படங்களில் நாயகி முதலில் காதலை வெளிப்படுத்துகிறார். இந்த டிரெண்டை பெண்கள் மட்டுமல்ல, மொத்த சமூகமும் வரவேற்க வேண்டும். விருப்பத்தைத் தெரிவிக்க ஆணுக்கும், பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும்தானே...'' என்றவர் தொடர்ந்தார்.
``இன்றைக்கு ஒன் நைட் ஸ்டாண்ட் வரை சமூகத்தின் வடிவம் மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பெண்களுக்கு ஒரு தெளிவு வேண்டும். அது காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, மனதுக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுங்கள். நாகரிகம் மாறிக்கொண்டிருக்கிற வேகத்தில், தேவையில்லாத சில பிரச்னைகளும் ஊடுருவிவிடலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் உறவில் காதலும் இருக்க வேண்டும், எதிர்கால பாதுகாப்பும் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை செக்ஷுவல் ரிலேஷன்ஷிப் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது'' என்கிறார் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.
மேலும் படிக்க செக்ஷுவல் ரிலேஷன்ஷிப்பில் பெண்களுக்கும் விருப்பங்கள், தேர்வுகள், விலக்கங்கள் உண்டு! | #HerChoice