
சிறுநீரகங்கள் நம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள். ரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருள்களை எல்லாம் பிரித்து, சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்ற உதவுவதே சிறுநீரகங்களின் பிரதான வேலை.

ஒரு மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன. வலது சிறுநீரகம் கல்லீரலுக்குக் கீழேயும், இடது சிறுநீரகம் மண்ணீரலுக்கு அருகிலும் அமைந்துள்ளன.

உடல்பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்படுகிறது. சிலருக்கு சிறுநீரகத்தில் கல் உருவாகும் பிரச்னை இருக்கும்.

சிறுநீரகக் கற்களை சரியானமுறையில் கவனிக்காமல் விட்டுவிட்டால், அது சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்யும்.

தவறான உணவுமுறைகளாலும், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததாலும் அசைவ உணவுகள் அதிகம் உண்பதாலும், ஆஃக்சலேட், யூரிக் அமிலம் போன்றவை உடலில் அதிகரித்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகின்றன.

சிறுநீரகக் கோளாறுகள் முற்றும்போது டயாலிசிஸ் முறையில் கழிவு உள்ள ரத்தத்தை வெளியேற்றிவிட்டு, நல்ல ரத்தத்தைத் திரும்பச் செலுத்தும் சிகிச்சைமுறை தரப்படுகிறது.

சிறுநீரகக் கோளாறுகள், மிகவும் முற்றிய நிலையில் சிறுநீரகச் செயலிழப்பு நிகழ்கிறது. இதற்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதுதான் ஒரே தீர்வு.

இப்போது பலரும் சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளதால், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து சிறுநீரகத்தை எடுத்து மாற்றி அமைக்கின்றனர்.

சரியான முறையில் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்து, மருந்துகளும் சரியான முறையில் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தால் 15-20 வருடங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

போதுமான அளவு தண்ணீர் பருகுவது, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, வருடம் ஒருமுறை சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது, நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் உண்பது போன்றவை சிறுநீரகத்துக்கு நல்லது செய்யும் வாழ்க்கை முறை.

சிறுநீரகங்கள் நம் உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகள். சிறுநீரக ஆரோக்கியம் காப்பது அனைவருக்கும் எளிதானதே... செய்வோம்!
மேலும் படிக்க சிறுநீரக ஆரோக்கியத்துக்கு... எளிய ஆலோசனைகள்! |#Visual Story