விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சாத்தையா(வயது 76). இவரின் மனைவி வசந்தமாலா. கடந்த 1991-1996 ஆட்சிக்காலத்தில் ராஜபாளையம் தொகுதியிலிருந்து சாத்தையா அ.தி.மு.க.வின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயில் அருகே வெள்ளப்பொட்டல் கிராமத்தில் 10.23 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அதன்பின் சாத்தையா தனது குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த இரு நாள்ட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த சிலர், முன்னாள் எம்.எல்.ஏ. சாத்தையாவுக்கு போன் செய்து, உங்களுக்கு சொந்தமான இடத்தில் சிலர் அத்துமீறி பணி செய்து வருவதாக தகவல் சொல்லியதாக தெரிகிறது. இதையெடுத்து விருதுநகர் மாவட்டம் வெள்ளப்பொட்டல் கிராமத்திற்கு வந்த சாத்தையா, தனக்கு சொந்தமான நிலத்தில் சிலர் அத்துமீறி பணிகள் மேற்கொண்டுவருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து விசாரிக்கும்போது, அந்தநிலம் திருமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரின் பெயரில் பத்திரம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆள்மாறாட்டம் செய்து தனது நிலம் மோசடியாக போலிப் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதிசெய்த சாத்தையா, இதுகுறித்து பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் முறையிட்டார். அவரின் முறையீட்டில்பேரில் போலிப் பத்திரப்பதிவு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் விசாரணையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ராஜமுனியாண்டி(75), அவரின் மனைவி முத்துலட்சுமி(72) ஆகியோர் குன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆஜராகி தாங்கள்தான் சாத்தையா, வசந்தமாலா என அறிமுகப்படுத்தியிருப்பதும், போலிஆணங்களை தயார்செய்து, முன்னாள் எம்.எல்.ஏவுக்கு சொந்தமான 10.23 ஏக்கர் நிலத்தையும் தனது மகன் முருகன் பெயருக்கு போலியாக பத்திரப்பதிவு செய்திருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ.சாத்தையா, நத்தம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த முருகன், அவரின் தந்தை ராஜமுனியாண்டி, தாய் முத்துலட்சுமி மற்றும் போலி பத்திரப்பதிவிற்கு உடந்தையாக செயல்பட்ட சார்பதிவாளர் சார்லஸ் பிரபு, பத்திர எழுத்தர் மாரியப்பன் ஆகிய 5 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க முன்னாள் எம்.எல்.ஏ-வின் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் - 5 பேர் மீது வழக்கு!