திருச்சி, துவாக்குடி மலை அண்ணாநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (28). இவர் நேற்று முன்தினம் மாலை வேலை விஷயமாக திருவானைக்காவல் ட்ரங் ரோடு மேம்பாலம் வழியாகச் சென்றிருக்கிறார். பெரியார் நகர் பாலம் இறக்கத்தில் வெங்கடேஷ் செல்லும்போது, அவருடைய கழுத்தில் பட்டம்விடப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் ஒன்று சிக்கியிருக்கிறது. மாஞ்சா நூல் கழுத்தில் பட்டு காயத்தை ஏற்படுத்த, கையால் அதைப் பிடிக்க கையிலும் வெங்கடேஷுக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற வெங்கடேஷ் சிகிச்சை பெற்றுவிட்டு நேரடியாக, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார்.

'நான் பைக்கில் செல்லும்போது பட்டம் விடுவதற்குப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் என்னுடைய கழுத்தில் சிக்கி காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொஞ்சம் சுதாரித்ததால் தப்பித்தேன். இல்லையென்றால் கழுத்தறுபட்டோ, பைக்கிலிருந்து கீழே விழுந்தோ விபத்தில் சிக்கியிருப்பேன். எனவே, தடைசெய்யப்பட்ட மாஞ்சா நூலைப் பயன்படுத்தும் நபர்களைக் கண்டுபிடுத்து அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கலங்கியபடி புகாரளித்திருக்கிறார்.
திருச்சி மாநகரில் மக்கள் அதிகமாகப் பயணிக்கும் பரபரப்பான சாலையில், மாஞ்சா நூல் சிக்கி இளைஞர் கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் சிலர் இந்த மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டம்விட்டு வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக, மாஞ்சா நூல் பயன்படுத்துபவர்களை போலீஸார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க திருச்சி: இளைஞரின் கழுத்தைப் பதம் பார்த்த தடைசெய்யப்பட்ட `மாஞ்சா' நூல்!