கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் உண்ணியூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (46). இவர் கணவரைப் பிரிந்து வாழ்கிறார். இவருடைய மகன் சுபாஷ் (26) இந்திய ராணுவத்தில் பணியாற்றிவருகிறார். வீட்டில் தனியாக இருக்கும் லதா, ஏதாவது தொழில் செய்ய நினைத்தார். லதாவின் உறவினரான முதலார் பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின் கிருபை தாஸ் (52) என்பவர் சித்திரங்கோடு பகுதியில் தனது கடை அருகே அரவை மில் ஏற்படுத்திக்கொடுத்தார். லதா அந்த அரவை மில்லை நடத்திவந்தார். இந்த நிலையில் கடந்த 30-ம் தேதி இரவு அரவை மில்லைப் பூட்டிவிட்டு பஸ்ஸில் வீட்டுக்குச் சென்ற லதா, உண்ணியூர்கோணம் பகுதியில் இறங்கி நடந்து வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த நான்கு பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். அவரின் கை உள்ளிட்ட சில இடங்களில் ஆசிட் பட்டதால் வலியால் துடித்த லதாவை அந்தப் பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பெண்மீது ஆசிட் வீசிய சம்பவம் குமரியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இரண்டு தனிப்படைகளை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, உண்ணியூர்கோணம் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வுசெய்தனர். அதன் அடிப்படையில் லதாவின் உறவினரான ஜெஸ்டின் கிருபை தாஸ் அவருடைய நண்பரான ஜெஸ்டின் ராபின்சன், செங்கொடி பகுதியைச் சேர்ந்த ஷாரீன் (23), கல்லங்குழிப் பகுதியைச் சேர்ந்த அஜின் குமார் (24) ஆகியோரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லதா தன்மீது ஆசிட் வீச ஆட்களை ஏற்பாடு செய்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில். "வீடு கட்டியதில் லதாவுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகத் தெரிகிறது. கடனால் வட்டியும் அதிகரித்திருக்கிறது. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனால் தனது பிரச்னையை உறவினரான ஜெஸ்டின் கிருபைதாஸிடம் கூறியிருக்கிறார் லதா. ஜெஸ்டின் கிருபைதாஸ், தன் நண்பரான செங்கொடி மச்சிவிளையைச் சேர்ந்த ராபின்சனிடம் ஐடியா கேட்டிருக்கிறார். அப்போதுதான் லதா மீது லேசாக ஆசிட் வீசிவிட்டு, கடன் கொடுத்தவர்கள்மீது பழியைப் போட்டுவிடலாம். அவர்கள் கடனைத் திருப்பிக் கேட்க மாட்டார்கள் என ஐடியா கொடுத்திருக்கிறார். ஆசிட் வீசும் சம்பவத்தைச் செயல்படுத்த மூவரும் விரிவாகத் திட்டம் தீட்டியிருக்கின்றனர்.

அந்தத் திட்டத்தின்படி ஆசிட் வீசுவதற்காக செங்கொடிப் பகுதியைச் சேர்ந்த ஷாரீன் (23), கல்லங்குழிப் பகுதியைச் சேர்ந்த அஜின் குமார் (24) ஆகியோரை ஏற்பாடு செய்துள்ளனர். ஜஸ்டின் கிருபைதாஸ், ராபின்சன் ஆகியோர் அவர்களுக்கு ஆசிட் வாங்கிக் கொடுத்ததுடன், பைக்கில் சென்று லதாவை அடையாளம் காட்டிக் கொடுத்திருக்கின்றனர். ஷாரின், அஜின்குமார் ஆகியோர் லதாமீது ஆசிட் வீசியிருக்கின்றனர். தன்மீது ஆசிட் வீச்சு நாடகம் நடத்த லதா எவ்வளவு பணம் கொடுத்தார் என்பது குறித்து விசாரித்துவருகிறோம்" என்றனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க தன்மீதே ஆசிட் வீச ஆள் செட் செய்த பெண்; கடன்காரர்களை மிரட்ட பலே ஸ்கெட்ச்! - சிக்கியது எப்படி?!