தொடர்ந்து எட்டு மணிநேரத்திற்கு சமூகத் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஆற்றல் குறைவதற்கு வழிவகுக்கும் எனவும், இது எட்டு மணி நேரத்திற்கு உணவு இல்லாமல் இருப்பதற்குச் சமம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் தொடர்ச்சியாக சில மணி நேரங்களுக்கு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால், நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நமக்குள் சில உணர்வுகள் ஏற்படும். மேலும் உணவைத் தேடும் உணர்வும் ஏற்படும். இதையே பசி என்கிறோம். அதேபோல, ஒரு சமூக இனமாக நாம் வாழ்வதற்கு, மற்றவர்களும் தேவை. சமூகத்தொடர்பு இல்லாமல் வாழ்வது என்பது, உணர்வுப் பசியுடன் ஒப்பிடக்கூடியது. பசிக்கும்போது உணவின் மீது நாட்டம் வருவதைப் போலவே, சமூகத் தொடர்பின்றி தனிமையில் இருக்கும் போது நமது மூளையில் ஏக்கம் தூண்டப்படுகிறது. இந்த ஏக்கம் நம்மை மீண்டும் மற்றவர்களுடன் இணைக்கச் செய்கிறது.

நமக்குள் இருக்கும் உணர்வு, சமூகத்தோடு இணைய வேண்டும் என்றே அதிகம் விரும்பும் என்று தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள், ’சமூகத்தில் உள்ள அனைவருடனும் சுமூகமான உறவு கொண்டிருக்க வேண்டும் என்பது பொதுவாக நாம் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. எனினும், இதன் பின்னால் இருக்கும் உளவியல் ரீதியான காரணம் என்ன என்பது பற்றி குறிப்பிட்டுச் சொல்ல முடியாது’ என்கின்றனர்.
இந்தச் சூழலில், கோவிட்-19 தொற்றுப் பரவலை தொடர்ந்து அமலில் இருந்த லாக்டவுன்களின் பின்னணியில், ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில், நீண்டகாலத் தனிமை மற்றும் சோர்வு ஆகியன, ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. மேலும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள், குறைவான ஆற்றலேயே கொண்டுள்ளனர். இதே சூழ்நிலை நீடித்தால் அது அவர்களுக்குத் தீமையாக மாறலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி ஆராய்ச்சி செய்வதற்காக, கோவிட் 19 ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் இருந்தவர்கள் மற்றும் ஆய்வகத்தில் இருந்தவர்கள் என இருவேறு தரப்பினரை ஒப்பீடு செய்து, பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்காக, 30 பெண் தன்னார்வலர்கள், மூன்று தனித்தனி நாள்களில் ஆய்வகத்திற்குள் வந்தனர். சமூகத்தொடர்பு இல்லாமல் மற்றும் உணவு இல்லாமல் எட்டு மணிநேரம் செலவழித்தனர். நாள் முழுவதும் பலமுறை அவர்களுக்கு மன அழுத்தம், மனநிலை மாற்றம் மற்றும் சோர்வு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டனர். மேலும் உடலில் ஏற்பட்ட அழுத்தத்தினால் அவர்களின் இதயத்துடிப்பு மற்றும் கார்டிசோல் அதிகமானதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகளைச் சரிபார்க்க, 2020ம் ஆண்டு வசந்த காலத்தில் ஆஸ்திரியா மற்றும் இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வின் அளவீடுகளுடன் இந்த முடிவுகள் ஒப்பிடப்பட்டன. இந்த ஆய்விற்காக 87 பங்கேற்பாளர்களிடம் இருந்து தரவை பெற்றுள்ளனர். அவர்கள் குறைந்தபட்சம் எட்டு மணிநேரத்தை தனிமையில் கழித்தனர். அவர்களின் மன அழுத்தம் மற்றும் நடத்தை விளைவுகள் ஏழு நாள்களுக்கு ஒருமுறை எனப் பலமுறை அதே அளவீடுகளுடன் மதிப்பிடப்பட்டன.

முடிவில், ``சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதற்கும் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் அதிகமான ஒற்றுமை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டுமே குறைந்த ஆற்றலையும், அதிக சோர்வையும் ஏற்படுத்தியது. உணவு இல்லாமல் இருப்பது ஆற்றலை இழக்கச் செய்யும், அதே நேரத்தில் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்வதும்கூட ஆற்றலை இழக்கச் செய்யும் என்பது ஆச்சர்யமாக உள்ளது" என்று பால் ஃபோர்ப்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அனா ஸ்டிஜோவிக் கூறினார்.
மேலும் படிக்க `பசியால் மட்டுமல்ல... தனிமையாலும் ஆற்றல் குறையும்’ - எச்சரிக்கிறது புதிய ஆய்வு