பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டா ராணுவ நிலையத்தில் கடந்த 12-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த நால்வரில் இருவர் கர்நாடக மாநிலத்தையும் மற்ற இருவர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள் என உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.
நடந்தது என்ன?
பதிண்டா ராணுவ நிலையம் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருக்கிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகாலை சமயத்தில் நடந்திருக்கிறது. இது பயங்கரவாதிகளின் சதிச் செயலா என சந்தேகம் எழுந்த நிலையில், அதை பஞ்சாப் காவல்துறை மறுத்திருக்கிறது. `இது பயங்கரவாத தாக்குதல் அல்ல... துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' என பஞ்சாப் காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது. பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இந்த துப்பாக்கிச் சம்பவம் தொடர்பாக, அடையாளம் தெரியாத இருவர்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறது பஞ்சாப் காவல்துறை.

விலகாத மர்மம்!
பதிண்டா ராணுவ நிலையம் இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ கிடங்குகளில் ஒன்று. இந்தப் பகுதிக்கு யாரோ சிலர் நுழைந்து பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி தாக்குதல் நடத்தியிருப்பதும், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இதே ராணுவ நிலையத்திலிருந்து `இன்சாஸ்' என்ற துப்பாக்கியும், 28 தோட்டாக்களும் காணாமல்போயிருப்பதும் பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது. கூடுதலாக பதிண்டா ராணுவ நிலையத்தில் நால்வரைத் தாண்டி மற்றொருவரும் உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்துகிடந்திருக்கிறார். எனவே இது தற்கொலையாக இருக்கலாம் என ராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர்.
உயிரிழந்த தமிழர்கள்!
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கமலேஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் விமானத்தில் கோவை, மதுரை விமான நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. கமலேஷின் உடல் அவரது சொந்த ஊரான வனவாசி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யக் கோரி அவருடைய உடல் எடுத்துவரப்பட்ட ஆம்புலன்ஸ் முன்பு உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டம் 4 மணி நேரம் நீடிக்கவே, ராணுவ வாகனத்தில் வைத்து கமலேஷின் உடல் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இதேபோல் யோகேஷின் உடலுக்கும் ராணுவ மரியாதை வழங்கப்படாததைக் கண்டித்து அவரின் உறவினர்களும் மறியல் போராட்டங்கள் நடத்தினர்.

மறுக்கப்பட்ட ராணுவ மரியாதை!
உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷுக்கு ராணுவ மரியாதை வழங்காதது குறித்து கேள்வி எழுந்த நிலையில், “போர்க்களத்தில் உயிரிழந்தால் மட்டுமே அரசு மரியாதை வழங்கப்படும். இதை சந்தேகக மரணமாக இந்திய ராணுவம் கருதும் காரணத்தினால் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படவில்லை' என கோவை மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், `யோகேஷூக்கு ராணுவ மரியாதை வழங்கச் சொல்லி ராணுவ முகாம் அலுவலர்களிடமிருந்து எந்த தகவல்களும் வரவில்லை என்பதால், நாங்கள் எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை' என தேனி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க பஞ்சாப்பில் உயிரிழந்த தமிழக வீரர்களுக்கு ராணுவ மரியாதை மறுப்பு! - பின்னணி என்ன?