தமிழ்நாடு மட்டுமல்லாது பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஆளுநர்களின் செயல்பாடுகள் பெரும்பாலான நேரங்களில் ஆளுங்கட்சிகளுக்கு எதிரானதாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில், ஆளுநருக்கெதிராக தனித் தீர்மானம் கொண்டுவந்த பிறகே... ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது. ஆனால் இதற்கு முன்னதாக, பலமுறை ஆளுநரைத் திரும்பப் பெறக்கோரியும், தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான இடத்தில் இருக்கும் ராஜ் பவனிலிருந்து ஆளுநரை வெளியேற்றக்கோரியும் பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
இத்தகைய சூழலில்தான், தமிழ்நாட்டுக்கு புதிய சட்டமன்றம் கட்டவேண்டும் எனவும், அதனை ஆளுநர் மாளிகை இருக்கும் இடத்தில்கூட கட்டலாம் என்றும் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து விகடன் வலைதளப் பக்கத்தில் இது குறித்து வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், ``அமைச்சர் துரைமுருகன் கோரியிருப்பதுபோல் தமிழ்நாட்டுக்கு புதிய சட்டமன்ற வளாகம் தேவையா?" என்று கேள்விகேட்கப்பட்டிருந்தது. அதற்கு, ``ஆம், இல்லை, கருத்து இல்லை" என மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிகபட்சமாக 56 சதவிகிதம் பேர், `தமிழ்நாட்டுக்கு புதிய சட்டமன்ற வளாகம் தேவையில்லை' எனத் தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 40 சதவிகிதம் பேர் `ஆம்' என்றும், நான்கு சதவிகிதம் பேர் `கருத்து இல்லை' என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

2023-24 நிதிநிலையாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக மாற்றுவதற்கு சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இது தொடர்பாக விகடன் வலைத்தளப் பக்கத்தில் தற்போது கருத்துக்கணிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்... https://www.vikatan.com/
மேலும் படிக்க துரைமுருகன் கூறுவதுபோல் தமிழ்நாட்டுக்கு புதிய சட்டமன்றம் தேவையா!? - விகடன் கருத்துக்கணிப்பு முடிவு