சித்த மருத்துவர் ஷர்மிகா கூறிய மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றியதால், பாதிப்பு ஏற்பட்டதாக இரண்டு பேர் தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவ இயக்குநரகத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஷர்மிகா. இதுகுறித்து ஷர்மிகா விளக்கம் எதுவும் அளிக்காததால் பா.ஜ.க-விலுள்ள ஷர்மிகாவின் தாயார் டாக்டர் டெய்சி சரணைத் தொடர்புகொண்டு பேசினேன்.
"ஷர்மிகா மீது இரண்டு பேர் புகார் அளித்துள்ளது குறித்து எங்களுக்கு இன்னும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அப்படி ஏதாவது தகவல் தெரிவித்தால் அதற்கு முறைப்படி பதிலளிப்போம். அதேநேரம், ஷர்மிகா மீது இப்படிப் புகார் அளிப்பதை அரசியல் காரணங்களுக்காகப் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பார்க்கிறேன். இதனை ஓர் அரசியல் விளையாட்டாகவே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

நான் பா.ஜ.கவில் இருப்பதால்தான் எனது மகளைப் பழிவாங்குகிறார்கள். பா.ஜ.க-வின் சிறுபான்மை அணியைச் சிறப்பாகக் கொண்டு செல்கிறேன். எண்ணற்ற கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். அதைப் பொறுத்துக்கொள்ளாமல் இப்படியெல்லாம் பழிவாங்குகிறார்கள். சிறுபான்மையினரின் ஓட்டுகளை தி.மு.க மட்டுமே வாங்கவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், நாங்கள் சிறுபான்மை அணியை வழிநடத்துகிறோம் என்பதற்காகவே எனது குடும்பத்தைப் பழிவாங்குவது முறையான செயல் அல்ல.
மேலும், சித்த மருத்துவத்திலிருந்து எந்த மருத்துவர் வந்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டினாலும் மற்ற மருத்துவர்கள், அவர்களைக் கட்டம் கட்டி ஜெயிலில் தள்ளி முடக்குகிறார்கள், பழிவாங்கி அவமானப்படுத்துகிறார்கள். சித்த மருத்துவர்கள் கொஞ்சம் தலைநிமிர்த்தி பேசிவிட்டாலே ரவுண்டு கட்டி அடிப்பது காலங்காலமாக நடக்கிறது. ஒரு சித்த மருத்துவர் இவ்வளவு பிரபலமாவதை அவர்கள் விரும்பவில்லை. அலோபதி மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால்தான், சித்த மருத்துவத்துக்கு ஓர் அங்கீகாரமாக ஷர்மிகா செயல்படுவதால், பல வகைகளிலும் அவர்மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

ஷர்மிகா மீது இரண்டு பேர் ரகசியமாகப் புகார் கொடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஷர்மிகா சொல்லும் மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றி நோய்கள் குணமடைந்து ஆரோக்கியமுடன் வாழும் நூற்றுக்கும் மேற்பட்டோரின் வீடியோக்களையும் பதிவுகளையும் சமூக வலைதளங்களில் ஆதாரங்களுடன் எங்களால் காட்டமுடியும். கட்டாயம் இது பழிவாங்கும் நடவடிக்கைதான்.
இப்படிச் செய்வதற்குச் சித்த மருத்துவ கவுன்சிலுக்கு எங்கிருந்து பிரஷர் வருகிறது என்பது தெரியவில்லை. எங்கள்மீது எத்தனை அவதூறுகள் வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால், கடவுள் எங்களைக் கைவிடமாட்டார் என்று நம்புகிறோம். சித்த மருத்துவத்துக்கு எதிராகவே நடக்கும் போர் இது" என்று வருத்தமுடன் பேசுபவரிடம், "உங்கள் கட்சியில் இந்த நடவடிக்கைகளுக்கு என்ன சொல்கிறார்கள்?" என்று கேட்டபோது, "எங்கள் கட்சியில் தனிப்பட்ட விஷயங்களுக்குத் தலையிட மாட்டார்கள். நாங்களும் உதவி என்று கேட்கமாட்டோம். பொது மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் குடும்பப் பிரச்னைக்குக் கட்சியின் ஆதரவைக் கேட்பதில்லை" என்கிறார்.
மேலும் படிக்க "நான் பா.ஜ.க-வில் இருப்பதால் என் மகளைப் பழிவாங்குகிறார்கள்; இது அரசியல் விளையாட்டு!"- டெய்சி சரண்