அரசியல் ரீதியாக பாஜக-வுக்கு ஆம் ஆத்மி கட்சி பெரும் சவாலாக விளங்கிவருகிறது. பிரதமர் மோடியையும் மத்திய பாஜக அரசையும் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துவருகிறார். இந்த நிலையில், ஆம் ஆத்மிக்கு எதிராக டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கை மத்திய பா.ஜ.க அரசு கையிலெடுத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த வழக்கில், கெஜ்ரிவாலின் வலதுகரமாக செயல்பட்டுவந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக, சி.பி.ஐ வளையத்துக்குள் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். சி.பி.ஐ அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி சி.பி.ஐ தலைமை அலுவலகம் சென்ற கெஜ்ரிவாலிடம், ஒன்பது மணி நேரம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
கெஜ்ரிவாலின் குரலை அடக்க வேண்டுமென்று மத்திய பா.ஜ.க அரசு நினைக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெல்லி முதல்வர் எதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட வேண்டும். கெஜ்ரிவால் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாயைக் கண்டுபிடித்தார்களா... தங்க பிஸ்கட்களைக் கண்டுபிடித்தார்களா? ஆம் ஆத்மியின் ஒரு தலைவருக்கு எதிராகவோ, ஒரு எம்.எல்.ஏ-வுக்கு எதிராகவோ எந்தவொரு ஆதாரத்தையும் மத்திய விசாரணை அமைப்புகளால் காட்ட முடியவில்லை” என்றார்.

மேலும், “கடந்த சுமார் 10 ஆண்டுகளாக மோடி ஆட்சி நடத்திவருகிறார். பணவீக்கத்தைக் குறைப்போம் என்று அவர்கள் பேசிவருகிறார்கள். ஆனால், விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது. அதற்கு எதிராக கெஜ்ரிவால் குரல் கொடுக்கிறார். ‘எந்த வேலைவாய்ப்பும் இல்லை. ஐந்து கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்’ என்று கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் 22 கோடிப் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னைகளைப் பற்றி கெஜ்ரிவால் பேசிவருகிறார். நாட்டின் பணம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மோடி பிரதமரான பிறகு, அவருடைய ஸ்பெஷல் நண்பர்களின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. இவற்றையெல்லாம் கெஜ்ரிவால் அம்பலப்படுத்திவருகிறார். ஆகவே, அவருடைய குரலை ஒடுக்க வேண்டுமென்று மோடி நினைக்கிறார்” என்றார் அமைச்சர் அதிஷி.

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே விசாரணை அமைப்புகள் மூலம் ஆம் ஆத்மி கட்சியை முடக்கிவிட வேண்டுமென்று மத்திய ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். கெஜ்ரிவாலை எப்படியாவது கைது செய்துவிடலாம், அவரை முதல்வர் பதவியிலிருந்து தூக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்களின் கனவு பலிக்காது. பா.ஜ.க அரசை கெஜ்ரிவால் தொடர்ந்து விமர்சிப்பார்” என்கிறார்கள் ஆம் ஆத்மி தலைவர்கள்.
இன்னொருபுறம், “ஆம் ஆத்மியை டெல்லி அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவோம்” என்று டெல்லி பா.ஜ.க தலைவர்கள் பலரும் பேசிவருகிறார்கள். 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலிலும், 2025-ல் டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மியை அப்புறப்படுத்தும் வேலையை பா.ஜ.க-வினர் செய்ய வேண்டும் என்று டெல்லி பா.ஜ.க-வின் செயல் தலைவரான வீரேந்திர சச்தேவா சமீபத்தில் பேசியிருக்கிறார்.
பா.ஜ.க-வின் மிரட்டலுக்கு கெஜ்ரிவால் அஞ்சுவதாகத் தெரியவில்லை. சி.பி.ஐ விசாரணைக்கு மறுநாள் டெல்லி சட்டமன்றத்தில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது, “டெல்லி மக்களுக்கு இலவசமாக மின்சாரம், தரமாக மருத்துவ வசதிகள், பல்வேறு நல்வாழ்வுத் திட்டங்கள் ஆகியவற்றை என்னுடைய அரசு வழங்கிவருகிறது. அதற்காக மத்திய அரசு என்னையும் என் அரசையும் குறிவைக்கிறது” என்று அவர் குற்றம்சாட்டினார்.
கெஜ்ரிவாலை முதல்வர் நாற்காலியிலிருந்து தூக்குவதற்கான முயற்சி நடக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில், கெஜ்ரிவால் பேச்சில் சீற்றம் வெளிப்பட்டது. சட்டமன்றத்தில் பேசியபோது, பிரதமர் கல்வித் தகுதி குறித்து கேள்வியெழுப்பி, மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் சீண்டவும் செய்தார். எல்லாவற்றுக்கும் கெஜ்ரிவால் தயாராக இருப்பதாகவே தெரிகிறது.!
மேலும் படிக்க விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி மதுபான ஊழல் வழக்கு... கெஜ்ரிவாலின் முதல்வர் பதவிக்கு குறியா?!