விவாகரத்துக் கோரி மனைவி தாக்கல் செய்த வழக்கில், விசாரணை காலத்திலேயே கணவர் இறந்துவிட்ட நிலையில், ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை அவருக்கு வழங்கும்படி, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படை வீரராக இருந்தவர் வினய் குமார், இவரின் மனைவி சோனியகா சர்மா. கடந்த 2015-ம் ஆண்டில் வினய் குமார் ஓய்வு பெற்றார். அவரின் பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், குழந்தைகளும் அவருக்கு இல்லாத சூழலில், மனைவி சோனிகா ஷர்மா மட்டுமே ஏகபோக வாரிசாக இருந்துள்ளார்.

இதனிடையே, கணவரிடம் இருந்து விவாகரத்துக் கோரி சோனியகா வழக்குத் தொடர்ந்தார். விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2016ம் ஆண்டில் வினய் குமார் காலமானார். இதையடுத்து, அவரின் மனைவி சோனிகா ஷர்மா, குடும்ப ஓய்வூதியம் மற்றும் பலன்களைக் கோரி விண்ணப்பித்தார்.
ஆனால், வினய் குமாரின் ஓய்வூதியப் பதிவுகளில் வாரிசுதாரராக மனைவியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதாலும், அவரது விவகாரத்து வழக்கு நடைபெற்று வந்ததை காரணம் காட்டியும் நிர்வாகம் தரப்பில், மனுதாரருக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, அவர், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தை நாடினார்.
விவகாரத்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மறுமணம் செய்து கொள்ளாத சோனிகா ஷர்மா, வினய் குமாரிடம் இருந்து நீதிமன்றம் மூலமாக மாதாமாதம் பரமாரிப்புத் தொகையை வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் வினய் குமார் குடும்ப ஓய்வூதியத்தை, அவரின் மனைவி சோனியாவுக்கு வழங்கக்கூடாது என எழுதி வைத்த உயிலை, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் எதிர்மனுதாரர்.

’திருமணம் செய்துகொண்ட பெண்கள், கணவர் இறந்த பின் பெறும் குடும்ப ஓய்வூதியம் என்பது சட்டத்தால் வழங்கப்படும் உரிமை. எனவே, சோனியாவிற்கு குடும்ப ஓய்வூதியத்தை மறுப்பது சட்டப்பூர்வமற்றது. எனவே, மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியம் உட்பட இதர சலுகைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
- நிலவுமொழி செந்தாமரை
மேலும் படிக்க விவாகரத்து வழக்கின்போது இறந்த கணவர்; மனைவிக்கு ஓய்வூதியப்பலன் உண்டா? - நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு