ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்னை, வடபழனியைச் சேர்ந்த ராஜசேகரன் - வனிதா தம்பதி, தங்கள் மாற்றுத்திறனாளி மகன் ஸ்ரீராம் சீனிவாஸ் உடன் வந்திருந்தனர். இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டரை கடலில் நீந்தி சாதனை படைக்க இருக்கும் தங்கள் மாற்றுத்திறனாளி மகனை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுக்க வந்ததாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து மாற்றுத்திறனாளி நீச்சல் வீரரான ஸ்ரீராம் சீனிவாஸின் தாய் வனிதாவிடம் நாம் பேசினோம்...

``எங்களுக்கு இரண்டு மகன்கள். இரண்டாவது மகன்தான் ஸ்ரீராம். பிறவியிலேயே மூளை முடக்குவாத பாதிப்புடன்தான் பிறந்தான். எத்தனையோ மருத்துவர்களிடம் சிகிச்சைக்காகச் சென்றோம். மூளை முடக்குவாதத்தை சரி செய்ய மருந்து இல்லை எனத் தெரிவித்துவிட்டனர். மற்றவர்களைப் போல தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்ற மன அழுத்தத்தில் வீட்டில் உள்ள பொருள்களை உடைப்பது, அதீத கோபப்படுவது என்று இருந்தவனைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது.
ஸ்ரீராமால் கால்களை கீழே ஊன்றி நடக்க முடியாது. 15 வயதில் மருத்துவர்கள் சைக்கிள் ஓட்ட வைத்து பயிற்சி அளிக்கும்படி ஆலோசனை கூறினர். அதன்படி சைக்கிள் ஓட்டக் கற்றுத் தந்தபோது, சிறிது தூரம் வரை சைக்கிள் பெடலை அழுத்தி ஓட்டினான். அது எங்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுத்தது. பின்னர் கால்கள் முழுவதுமாக குணமாக நீச்சல் பயிற்சி அளிக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதேபோல் நீச்சல் பயிற்சியாளரைக் கொண்டு நீச்சல் பயிற்சி கொடுத்தோம். ஆனாலும் அவனுக்குக் கால்கள் முழுமையாகச் செயல்படத் தொடங்கவில்லை. இனி என்ன செய்வது எனப் புரியாமல் மகனை நினைத்து நானும் கணவரும் கலங்கினோம். அப்போதுதான் கடவுள் போல் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர், என் மகன் நீச்சல் அடிப்பதை பார்த்து, இவனை மாற்றுத்திறனாளிகள் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ளச் செய்யுங்கள் என யோசனை கூறினார்.
இதையடுத்து 2013-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் நடந்த நீச்சல் போட்டியில் அவனை கலந்துகொள்ள வைத்தோம். அதில் வெற்றி பெறவில்லை. அதே நேரத்தில் ஆறுதல் பரிசு கிடைத்தது. அதனை வாங்கிய என் மகன் அவ்வளவு சந்தோஷமடைந்தான். அதிலிருந்து எங்கு நீச்சல் போட்டிகள் நடந்தாலும் அவனை அழைத்துச் சென்று விடுவோம்.

தான் என்ன செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இலக்கை அடைய வேண்டும் என்ற லட்சியம் அவனுக்குள் இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.
மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, கால்கள் செயலிழந்த என் மகனைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் யாரும் நீச்சல் வீரர் ஆனதில்லை என்பது தெரியவந்தது. அவனது திறமையை எப்படியாவது வெளி உலகத்திற்குக் காட்ட வேண்டும் எனப் போராடினோம். அப்போதுதான் கடல் நீச்சல் பயிற்சியாளரை கண்டுபிடித்து என் மகனை கடலில் நீந்தி சாதனை படைப்பதற்கான பயிற்சிகள் கொடுத்தோம். கடந்த 2018-ம் ஆண்டு இந்திய கடற்படை சார்பில் நடத்தப்பட்ட நீச்சல் போட்டியில் புதுச்சேரியில் இருந்து கடலூர் வரை கடலில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை மூன்றரை மணிநேரத்தில் கடந்து சாதனை படைத்தான்.
கடந்த ஆண்டு புதுச்சேரியில் இருந்து கடலூர் வரை பத்து கிலோ மீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்தான். இந்தப் போட்டியை பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் ரங்கசாமி பரிசுகளை வழங்கினார்.
மூன்று முறைக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம். ஆனால் கடைசி வரை தேர்வாகியும் இறுதியில் என் மகனின் பெயரை போட்டியிலிருந்து நீக்கிவிட்டனர். அதற்கான காரணத்தை விளையாட்டுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோதும் விளக்கம் கொடுக்க மறுத்து விட்டனர்.

இவனுடைய திறமையை வெளி உலகத்திற்கு காட்ட என்ன செய்யலாம் எனத் தேடிய போதுதான் தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிவரை தனது குழுவினருடன் நீந்தி சாதனை படைத்த தகவலை அறிந்து கொண்டோம். அவரிடம் என் மகனை அழைத்துச் சென்றோம். அவர் என் மகனின் சாதனைகளைப் பார்த்து வெகுவாகப் பாராட்டினார்.
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தும் போது என்ன மாதிரியான ஆபத்துகள் ஏற்படும், அதனை மீறி எப்படி சாதிப்பது, அந்த சாதனையைச் செய்ய எந்தெந்த அதிகாரிகளைப் பார்த்து அனுமதி வாங்க வேண்டும் என்ற அனைத்து ஆலோசனைகளையும் வழங்கினார். அதனைக் கேட்டு அனைத்து அனுமதிகளையும் வாங்குவதற்கான முயற்சிகளை செய்து வந்தோம். அதே நேரத்தில் தனுஷ்கோடி கடலில் நீந்துவதற்கான அனைத்து பயிற்சிகளையும் இரண்டு மாதங்களாக மகனுக்குக் கொடுத்து வந்தோம்.
தற்போது தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. புதன்கிழமை (இன்று) காலை இந்திய கடற்படை, தமிழகக் கடலோர காவல் படை ஆகியோர் பாதுகாப்புடன், நீச்சல் பயிற்சியாளருடன் இலங்கை தலைமன்னாருக்குச் சென்று, அங்கிருந்து இலங்கை கடற்படை சோதனைகளுக்குப் பின்னர் மதியம் நீந்த தொடங்கி 32 கிலோ மீட்டரை 24 மணிநேரத்தில் கடக்கத் திட்டமிட்டுள்ளோம்.
எல்லோரும் கைதட்டுவது, அவனை போட்டோ எடுப்பது, பரிசு கொடுப்பதைப் பார்த்து அவனுக்குள் ஏற்படும் ஆனந்தம் அவனது அறிவுத்திறனையும் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்துகிறது. இப்போது அவனது வேலைகளைத் தானே செய்து கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டான். ஆனால் ஒருநாள் நீச்சல் பயிற்சிக்குச் செல்லாவிட்டாலும் அவனது மனநிலை வேறு மாதிரியாக மாறிவிடும். நீச்சல் போட்டியில் கலந்து கொண்டாலும், கலந்து கொள்ளாவிட்டாலும் காலம் முழுவதும் அவனுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டோம்.

சாதாரண நீச்சல் வீரர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகல் பாராது கடுமையாகப் பயிற்சி எடுப்பார்கள். ஆனால் என் மகன், ’இலக்கை அடைந்தால் என்னோடு போட்டோ எடுப்பார்கள், பரிசு கொடுப்பார்கள்’ என்பதற்காக அவனையே அறியாமல் 24 மணி நேரமும் நீச்சல் பயிற்சி எடுத்து வந்துள்ளான். இந்த தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 32 கிலோமீட்டர் தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து என் மகன் சாதிப்பான் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் என் மகனை ஊக்கப்படுத்த வருவதாக உறுதியளித்துள்ளார்’’ என்றார் நம்பிக்கையுடன்.
வாழ்த்துகள் ஸ்ரீராமுக்கும் அவர் பெற்றோருக்கும்!
மேலும் படிக்க `மூளை முடக்குவாதத்தை மீறி, கடல் கடந்து சாதிப்பான்!’ - மாற்றுத்திறனாளி நீச்சல்வீரரின் தாய் உருக்கம்