கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கத்தில் `வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா' தொடக்க நிகழ்வு நடைபெற்றது. அதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், "தமிழ்நாட்டில் இப்போது சட்டசபைக் கூட்டம் நடக்கிறது. ஆனாலும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். வைக்கம் இப்போது கேரள மாநிலத்தில் இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு எழுச்சியையும், உணர்ச்சியை ஏற்படுத்திய ஊர். 1924-ம் ஆண்டு வைக்கத்தில் நடந்த போராட்டம் என்பது, கேரளத்தின் சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல - தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம். தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோட்டிலும், சுசீந்திரத்திலும், திருவண்ணாமலையிலும், மதுரையிலும், திருச்சியிலும், மயிலாடுதுறையிலும் கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்துவதற்கான தூண்டுதலாக இருந்தது வைக்கம் போராட்டம்தான். கேரளாவைச் சேர்ந்த டி.கே.மாதவன் அவர்களும் - தமிழ்நாட்டைச் சேர்ந்த தந்தை பெரியாரும் இணைந்து நடத்திய வெற்றிப் போராட்டம்தான் வைக்கம் போராட்டம். போராட்டத்தால் வைக்கம் கோயில் சாலைகள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டன. இதன் வெற்றி விழா வைக்கத்தில் நடந்தபோதும் மறக்காமல் பெரியாரை அழைத்துப் பாராட்டினார்கள் கேரளத்துத் தலைவர்கள். அந்த வகையில், 100 ஆண்டுகள் கழித்தும் தமிழ்நாட்டை மறக்காமல் எங்களை அழைத்திருக்கிறார் கேரள மாநிலத்தினுடைய முதலமைச்சர் பினராயி விஜயன்.

பெரியார் சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து சிறை வளாகத்தில் புதிய நினைவகம் அமைக்கவும் தமிழ்நாடு அரசு நினைக்கிறது. உரிய முறையில் அனுமதிக் கடிதத்தை கேரள அரசுக்கு நாங்கள் விரைவில் அனுப்பிவைப்போம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு எத்தகைய ஒற்றுமையுடன் போராடி வென்றோமோ அதே போன்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம்" என்றார்.
இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், "தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டபோது, வைக்கம் போராட்டம் குறித்து ஸ்டாலின் சொன்னார். வைக்கம் போராட்டம் பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தியது. அனைத்து சமூகத்தினரும் போராட்டத்தில் ஒன்றாக நிற்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை அது கொடுத்தது. தமிழகம், கேரளத்தின் மனமும் ஒன்றாக நின்றது. இரு மாநிலங்களின் ஒற்றுமையான மனது வருங்காலத்திலும் தொடரும். இரு மாநிலங்களின் ஒற்றுமை சகோதர உறவாக வலுப்பெறும். இந்த ஒற்றுமை இந்தியாவுக்குப் புதிய வழிகாட்டுதலை உயர்த்திக்காட்டும் என்பதை காந்தி, நாராயணகுரு, ஈ.வெ.ரா ஆகியோரின் நினைவு கலந்து நிற்கும் வைக்கம் மண்ணிலிருந்து மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முன்னெடுத்த புரட்சி கருத்துகளைத் தூக்கிப்பிடிக்கும் ஆட்சி கேரளத்திலும், தமிழ்நாட்டிலும் இருக்கின்றன. பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்கிறது ஸ்டாலின் தலைமையிலான தி மு.க அரசு. புரட்சியின் உத்வேகத்துடன் புது சமூகத்தை உருவாக்க கேரளத்தில் இடதுசாரி அரசு முயல்கிறது. புரட்சியை முன்மாதிரியாக கொண்டுசெல்லும் இரு மாநிலங்களும் ஒன்று சேர்ந்திருப்பது இந்த விழாவின் முக்கியத்துவமாகும்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நம் சமூகத்தின் பொது நன்மைக்காக இந்தப் போராட்டம் நடந்தது. நம் சுதந்திரப் போராட்டங்கள் முன்வைத்த கருத்துகளுக்கும், இந்திய அரசியலமைப்புக்கும் எதிராக பெரிய தாக்குதல் நடந்துகொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் நாம் இங்கு சங்கமித்திருக்கிறோம். அந்தத் தாக்குதலை தோற்கடிக்கும் விதமாகப் புரட்சி முன்னேற்றங்களை கொண்டுவர வேண்டும். மதச்சார்பின்மை இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் ஒன்று. அதை புறக்கணித்துவிட்டு நம் நாட்டை மதச்சார்புள்ள நாடாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை பலப்படுத்த முயல்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தைப் புறந்தள்ளிவிட்டு மனு ஸ்மிருதியை கொண்டுவரும் முயற்சி நடக்கிறது. இது பழைய காலத்தின் அடக்குமுறைகளைத் திரும்பக் கொண்டுவர மட்டுமே உதவும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வைக்கம் போராட்டத்தின் கருத்தை நிலைநிறுத்தும் நினைவுச்சின்னம் இங்கு அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
மேலும் படிக்க வைக்கம் விழா: "இருமாநில ஒற்றுமை இந்தியாவுக்கே வழிகாட்டும்" - ஸ்டாலின் முன் நெகிழ்ந்த பினராயி விஜயன்!