`அது போலி... எங்களைப் பிரிக்க முடியாது!' - ஆடியோ சர்ச்சைக்கு அமைச்சர் பி.டி.ஆர் விளக்கம்

கடந்த 14-ம் தேதி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க-வினரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் எனக் கூறி, சில தரவுகளை வெளியிட்டார். அது அரசியல் அரங்கில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து அண்மையில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து `அவர்கள் 30,000 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர்' எனப் பேசுவது போன்ற ஆடியோ ஒன்றை பா.ஜ.க-வினர் வெளியிட்டனர். மேலும், அமைச்சர் பி.டி.ஆரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் விளக்கக் குறிப்பில், ``சமூக வளைதளங்களில் நான் பேசியதாகப் பகிரப்பட்டு வைரலாகும் ஆடியோ கிளிப் போலியானது. என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் எப்போதுமே எதிர்வினையாற்றியதில்லை. ஆனால், தற்போது இந்த விவகாரத்தில் நான் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
My statement on the 26-second malicious fabricated audio clip pic.twitter.com/KM85dogIgh
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) April 22, 2023
நான் இங்கே இருப்பது... என்னுடைய பொதுவாழ்க்கையில் செய்த அனைத்தும் தி.மு.க தலைவர், முதல்வர் ஸ்டாலினால்தான். எங்களைப் பிரிப்பதற்கான முயற்சிகள் எப்போதும் எடுபடாது. இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பல மாதங்கள் ஆகும் என்பதை நான் உணர்ந்தாலும்... இதில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க Tamil News Today Live: `அது போலி... எங்களைப் பிரிக்க முடியாது!' - ஆடியோ சர்ச்சைக்கு அமைச்சர் பி.டி.ஆர் விளக்கம்