மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அமல்படுத்த தீவிரம் காட்டிவரும் சில முக்கிய விஷயங்களில் ஒன்று பொது சிவில் சட்டம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், பொது சிவில் சட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அஸ்ஸாமில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது என ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக தெலங்கானா மாநில பா.ஜ.க தலைவர் பண்டி சஞ்சய் குமார், தான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் கரீம் நகரில் `இந்து ஏக்தா யாத்திரை' (Hindu Ekta Yatra) நிகழ்ச்சியொன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தார். இதில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்துகொண்டார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``நான்கு பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாலாம் என்று நினைக்கின்ற சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள். அது அவர்களின் எண்ணம். ஆனால் நான் சொல்கிறேன், இனி அவர்கள் நான்கு திருமணம் செய்துகொள்ள முடியாது. அந்த நாள் முடியப் போகிறது. அத்தகைய நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியாவில் பொது சிவில் சட்டம் (யுசிசி) வரப் போகிறது. இந்தியாவை உண்மையான மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்று கூறினார்.
மேலும் இந்தாண்டு இறுதியில் தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் முதல்வர் கே.சந்திரசேகர ராவை தாக்கிப் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``ராஜாவுக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கின்றன. தெலங்கானாவில் ராம ராஜ்ஜியம் அமைய வேண்டும். அதுவே எங்களின் இலக்கு. இந்து நாகரீகத்தின் அடிப்படையில் தெலங்கானாவில் ராம ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க ``இனி அவங்க 4 திருமணம் செய்துகொள்ள முடியாது; விரைவில் பொது சிவில் சட்டம் அமல்!" - அஸ்ஸாம் முதல்வர்