மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி சொந்தக்கட்சி உறுப்பினரிடமே ரூ.9 லட்சம் ஏமாற்றிய வழக்கில் விருதுநகர் பா.ஜ.க.மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், "விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாண்டியன். இவர், விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. துணைத்தலைவராக உள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ஒருவருக்கு ரெயில்வே துறையிலும், மற்றொருவருக்கு கப்பல் துறைமுகத்திலும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கடந்த 2017-ல் 11 லட்ச ரூபாயை பா.ஜ.க. மேற்கு மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷூம், செயலாளர் கலையரசன் என்பவரும் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.

ஆனால் கொடுத்த வாக்குறுதியின்படி பாண்டியன் மகன்களுக்கு மத்திய அரசு வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த பாண்டியன், தனது மகனுக்கு அரசு வேலைக்கூட வாங்கித்தர வேண்டாம். நான் கொடுத்த பணத்தைமட்டும் என்னிடம் திருப்பிக்கொடுங்கள் என கேட்டுள்ளார். பலக்கட்ட புகார்களுக்கு பிறகு, வி.கே.சுரேஷும், கலையரசனும் சேர்ந்து 2 லட்ச ரூபாயை மட்டும் பாண்டியனுக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதிப்பணம் ரூ.9 லட்சத்தை திருப்பிக்கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர், தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பா.ஜ.க.மேற்கு மாவட்டத் தலைவர் வி.கே.சுரேஷ் மற்றும் செயலாளராக உள்ள கலையரசன் ஆகியோர் தன்னிடம் 9 லட்சம் ரூபாய் பணமோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முதற்கட்டமாக கலையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த வி.கே.சுரேஷ் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தை அணுகி நிபந்தனையின் பேரில் முன்ஜாமின் பெற்றிருந்தார். அதன்படி முன்ஜாமின் பெறுவதற்கு 5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கமாக செலுத்தவேண்டுமென நீதிமன்றம் கூறியிருந்ததாக தெரிகிறது. ஆனால், இந்தத்தொகையை செலுத்தாமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார். இந்தநிலையில், நிபந்தனை முன்ஜாமீனுக்கு பணம் செலுத்துவதற்கு உயர் நீதிமன்றம் கொடுத்த கெடு தேதி காலாவதியானதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை நாடி முன்ஜாமீன் பெற வி.கே.சுரேஷ் முயற்சித்துள்ளார்.

ஆனால் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையே இந்த வழக்கில் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி வழக்கை முடித்துவைத்துள்ளது. இந்நிலையில், நிபந்தனை முன்ஜாமீன் காலாவதியானதை தொடர்ந்து வி.கே.சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்" என தெரிவித்தனர்.
மேலும் படிக்க அரசு வேலை... சொந்த கட்சி நிர்வாகியிடமே ரூ.9 லட்சம் மோசடி - விருதுநகர் பாஜக மாவட்ட தலைவர் கைது!