விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு நாகமுத்து, தைமுத்து, மாரிமுத்து மற்றும் வீரமுத்து என நான்கு மகன்களாம். இதில் கடைசி மகனான வீரமுத்துவிற்கு மூன்று வருடத்திற்கு முன்பாக திருமணமான நிலையில், 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சென்னை தாம்பரம் பகுதியில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த வீரமுத்து, வாரம் ஒரு முறை ஜெயங்கொண்டான் கிராமத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

அதன்படி ஊருக்கு வந்திருந்த வீரமுத்து, தனது இருசக்கர வாகனத்தில் செஞ்சிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு நேற்றுமுந்தினம் இரவு (09.05.2023) சென்றுள்ளார். சுமார் 8 மணி அளவில், பொன்பத்தி கிராமம் பகுதியில் வீரமுத்துவை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், பயங்கரமான கத்தியை கொண்டு வீரமுத்துவின் தலை, கால் மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயமடைந்த வீரமுத்து உயிருக்கு போராடிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்துள்ளனர். ஆம்புலன்ஸ் மூலமாக வீரமுத்து செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
அன்று இரவே, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வீரமுத்து, நேற்று (10.05.2023) அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வீரமுத்துவின் மனைவி மங்கம்மாள் செஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனிடையே, சந்தேகத்தின் அடிப்படையில் வீரமுத்துவின் சகோதரர் மாரிமுத்துவை போலீஸார் அழைத்துசென்று விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.

'வீரமுத்து ஊருக்கு வரும் சமயங்களில் தனது மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதனை கண்டித்தும் வீரமுத்து கேட்காததால் கொலை செய்தேன்' என்றும் போலீஸாரிடம் மாரிமுத்து வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், வீரமுத்துவை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றபோது, ஏதும் தெரியாதது போல் மாரிமுத்துடன் ஆம்புலன்ஸில் சென்று நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாரிமுத்துவை கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். தனது மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த உடன் பிறந்த தம்பியை, அண்ணனே வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க விழுப்புரம்: `மனைவிக்கு பாலியல் தொல்லை' - தம்பியை வெட்டி கொலை செய்த அண்ணன்; நடந்தது என்ன?