Doctor Vikatan: எங்கள் வீட்டில் 5 வருடங்களாக நாய் வளர்க்கிறோம். இப்போது திடீரென என் 10 வயது மகளுக்கு நாய் அலர்ஜி உள்ளதாகச் சொல்கிறார் மருத்துவர். என் மகளுக்காகத்தான் அந்த நாய்க்குட்டியையே வாங்கினோம். இப்போது அதன் அருகே போகக்கூடாது என்பதை அவளுக்கு எப்படிப் புரியவைப்பது? நாயை வீட்டைவிட்டு விரட்டவும் யாருக்கும் மனதில்லை. இந்த அலர்ஜியானது காலம் முழுவதும் தொடருமா அல்லது மருந்துகள் மூலம் குணப்படுத்திவிடலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்
செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவற்றை வளர்ப்பதால் ஏற்படும் அலர்ஜி, அவற்றை வளர்க்கத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
ஆரம்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்து, சில நாள்கள் கழித்து, தும்மல், மூக்கடைப்பு, வீஸிங் போன்ற அறிகுறிகளாக வெளிப்படலாம். ஆனால் அவை செல்லப் பிராணிகளால் ஏற்பட்ட அலர்ஜியின் அறிகுறிகள் தானா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதை உறுதி செய்ய பரிசோதனைகள் உள்ளன. இது பொதுவாக சருமத்தில் செய்யப்படும். அப்படிச் செய்ய முடியாத குழந்தைகளுக்கு ரத்தப் பரிசோதனை மூலம், அலர்ஜிக்கான IgE மற்றும் Allergen-Specific Immunoglobulin E Test செய்து பார்க்க வேண்டும். இவற்றில் ஒன்றோ, இரண்டுமோ அலர்ஜி இருப்பதை உறுதி செய்தால், செல்லப் பிராணிகளைப் பிரிந்து இருப்பதுதான் தீர்வு.
அலர்ஜிக்கான சிகிச்சை இருந்தாலும், அதற்கான அடிப்படை காரணத்தைத் தவிர்ப்பதுதான் சரியானது. அதாவது, ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவு, சூழல், பிற பொருள்களைத் தவிர்ப்பதுதான் அலர்ஜி சிகிச்சையில் அடிப்படை.
அலர்ஜி இருப்பது தெரிந்தும் அதிலிருந்து வெளியே வர முடியாத பட்சத்தில், டீசென்சிட்டைசேஷன் (Desensitization) என்ற தீர்வு இருக்கிறது. ஆனால் இது பலவித பக்க விளைவுகளைக் கொடுக்கக் கூடியது. எல்லா விதமான அலர்ஜிக்கும் இது தீர்வாகவும் அமையாது.
தூசு, அதிலுள்ள பூச்சிகளால் ஏற்பட்ட அலர்ஜிக்கு டீசென்சிட்டைசேஷன் தீர்வாகலாம். அதுவே வளர்ப்புப் பிராணிகளால் ஏற்படும் அலர்ஜிக்கு, இது முழுமையான பலன் தராது.

வாழ்க்கை முழுவதும் இதைத் தொடர வேண்டுமா என்றால். அதற்கு உறுதியான பதிலைச் சொல்ல முடியாது. சிலருக்கு சில காலம் ஒவ்வாமைக்கான காரணத்தைத் தவிர்த்து வாழும்போது அது சரியாகலாம். இது உணவுக்கும் பொருந்தும்.
ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை குறிப்பிட்ட காலத்துக்குத் தவிர்த்துவிட்டு, மீண்டும் உண்ணும் போது அது அலர்ஜியை ஏற்படுத்தாமலும் போகலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் ஏற்படும் அலர்ஜி... அதை விட்டு விலகுவதுதான் தீர்வா?