Doctor Vikatan: என் 17 வயது மகன் உடல் மெலிந்து, சதைப்பிடிப்பின்றி எலும்புகள் தெரியும்படி இருக்கிறான். அதேநேரம் அவனது உடலிலோ, படிப்பிலோ எந்தப் பிரச்னையும் இல்லை. ஆக்டிவ்வாகவும் தெம்புடனும் ஓடியாடுகிறான். எனினும், காலை வெயில், காற்றோட்டமில்லாத கூட்ட நெரிசல் போன்ற தருணங்களில் மயக்கமடைந்திருக்கிறான். இது கவலைப்படக்கூடியதா... சிகிச்சை தேவையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
உங்களுடைய மகன் எப்போதுமே ஒல்லியான உடல்வாகுடன்தான் இருப்பார், ஆனாலும் படிப்பிலோ, விளையாட்டிலோ எந்தப் பிரச்னையும் இல்லை, ஆக்டிவ்வாகவே இருக்கிறார் என்றால் பயப்படத் தேவையே இல்லை. அப்படி இருப்பது நார்மல்தான்.
ஏனெனில் வளரும் பருவத்தில் பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதால், எனர்ஜி செலவாவதால் உடல் பருமன் குறைவாக இருக்கலாம். தவிர அது வளர்ச்சியின் ஒரு பகுதிதான் என்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
பொதுவாகவே குழந்தைகள் உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது மயக்கம் போட்டு விழுவது சகஜம். தவிர இன்று டீன் ஏஜ் பிள்ளைகள் பலரும் இரவில் சரியாகத் தூங்குவதில்லை. மொபைல் உபயோகம் நள்ளிரவு வரை நீள்கிறது. அதன் பிறகு தாமதமாகவே தூங்கச் செல்கிறார்கள்.
போதுமான அளவு தூக்கம் இல்லாததாலும் காலையில் ஒருவித களைப்பும் அசதியும் ஏற்படலாம். ஒருவேளை உங்கள் மகன் அடிக்கடி இப்படி மயக்கம் அடைந்து விழுந்தால், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் சரியாக இயங்குகின்றனவா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம். மற்றபடி இதில் வருத்தப்படவோ, கவலைப்படவோ ஒன்றுமில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: சதைப்பிடிப்பில்லாத உடல்வாகு, அடிக்கடி மயக்கம்... டீன் ஏஜ் மகனுக்கு சிகிச்சை அவசியமா?