விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த 16வது ஐ.பி.எல் தொடரில் யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.
மொத்தம் 48 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி முதலிடத்திலும், லக்னோ அணி இரண்டாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. பலரும் முதலில் சென்னை, மும்பை அணிகள்தான் கோப்பையை வெல்லும் என்று கூறிவந்தனர். ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டிகளைப் பார்த்து மற்ற அணிகளுக்கே வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இதுகுறித்து தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், "தற்போதைய ஃபார்மை வைத்து பார்க்கும்போது குஜராத் அணிதான் கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கிறேன். மிகச்சிறந்த ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த அணியின் வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அதனால் கோப்பையை வெல்லும் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிதான்" என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் அணியைக் கையாளும் விதம் நன்றாக உள்ளது. தங்கள் அணியில் இருக்கும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களையும் அவர் கையாளும் விதம் பாராட்டுக்குரியது. ஒரு சாதாரண கேப்டன் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை ஓர் அணியில் வைத்துக் கையாள்வது என்பது கடினமான ஒன்று. ஆனால் அதை அவர் மிக எளிதாகச் செய்கிறார்" என்று சஞ்சு சாம்சனை ரவி சாஸ்திரி பாராட்டியிருக்கிறார்.
இந்த வருட ஐ.பி.எல் கோப்பையை எந்த அணி வெல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.
மேலும் படிக்க IPL 2023: "கோப்பையை வெல்லப் போவது தோனி அல்ல; இந்த அணிதான்!"- ரவி சாஸ்திரி சொல்லும் லாஜிக்