திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கை விவரங்கள், வாக்குச்சாவடி குழுக்கள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
`முதல்வர் யார்?' - எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மேலிடம்!
நடந்து முடிந்த கார்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றிக்கொடி நாட்டி இமாலய சாதனை புரிந்திருக்கிறது. மோடி அலை, இந்துத்துவ பிரசாரம், மேலிட தலைவர்களின் ரோடு ஷோக்கள் என பா.ஜ.க-வினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த முறை பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

காங்கிரஸ்-பா.ஜ.க இடையே இழுபறி நீடிக்கும், அந்த நேரத்தில் குமாரசாமியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என தேர்தலுக்கு முந்தைய, பிந்தையக் கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால், காங்கிரஸின் `கை'க்குள் கர்நாடகம் முழுவதுமாக அடங்கியிருக்கிறது. கடும் போட்டியாளராகக் கருதப்பட்ட பா.ஜ.க 64 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல, குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெறும் 19 இடங்களில் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. அதனால், `கிங் மேக்கர்' உதவியின்றி `சோலோ கிங்'காக காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.

வெற்றியைத் தொடர்ந்து, `முதல்வர்' யார் என்ற கேள்வி காங்கிரஸ் முகாமில் பரபரத்துக் கொண்டிருக்கிறது. சீனியாரிட்டி அடிப்படையில் சித்தராமையாவும், இந்தத் தேர்தல் வெற்றிக்காக பெரும்பாடுபட்டவர் என்ற அடிப்படையில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கின்றனர். தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டு விடைபெற்றார். இந்த நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பதை கலந்து பேசி முடிவெடுக்க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் மேலிடம் அழைப்புவிடுத்திருக்கிறது.
மேலும் படிக்க Tamil News Today Live : `முதல்வர் யார்?' - எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மேலிடம்!