திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ்வரா விலங்கியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி அனுமன் குரங்குகள் மற்றும் இரண்டு சிங்கங்கள் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 5-ம் தேதி கொண்டுவரப்பட்டது. வெளியில் இருந்து புதிதாக வரும் மிருகங்கள் தனிமைப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அனுமன் குரங்குகள் தனி கூண்டில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் குரங்குகளுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதியில் சோதனை முயற்சியாக அவை திறந்துவிடப்பட்டன.

அதில் பெண் குரங்கு உடனே வெளியே குதித்து ஓடியது. பெரிய மரத்தில் ஏறிய குரங்கு காம்பவுண்ட் சுவரைத்தாண்டி வெளியே குதித்து ஓடியது. நந்தங்கோடு பகுதிக்குச் சென்று ஒரு வீட்டுக்கு அருகே மரத்தின்மீது ஏறி உட்கார்ந்து இருந்தது. பின்னர் மீண்டும் தனது ஜோடியை தேடி உயிரியல் பூங்காவின் காம்பவுண்டில் வந்து அமர்ந்தது. அதை பிடித்து கூண்டில் அடைக்கும் முயற்சியில் ஊழியர்கள் இறங்கியுள்ளனர். அதற்காக குரங்குக்கு பிடித்தமான உணவுகளை அங்கு வைத்துள்ளனர். ஆனால் உழியர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. நேற்று முறைப்படி குரங்குகள் மற்றும் சிங்கங்களை கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சு ராணி திறந்துவிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குரங்கு ஒன்று தப்பி ஓடிவிட்டது. அனுமன் குரங்கு தப்பி ஓடும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
மூன்று வயது அனுமன் வகை குரங்கை பிடிக்க மயக்க மருந்து செலுத்தும் திட்டம் இல்லை எனவும், இதில் ஊழியர்கள் மீது தவறு இல்லை என கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சுராணி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் குரங்குகளுடன் கொண்டுவரப்பட்ட 5 வயதுள்ள ஒரு ஆண் சிங்கம் மற்றும் 6 வயதுள்ள ஒரு பெண் சிங்கம் ஆகியவை நேற்று கூண்டில் இருந்து வெளியே திறந்துவிடப்பட்டன. ஆண் சிங்கத்துக்கு லியோ எனவும், பெண் சிங்கத்துக்கு நைலா எனவும் அமைச்சர் சிஞ்சு ராணி பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சிஞ்சு ராணி கூறுகையில், "இப்போது ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் தனித்தனியாக விடப்பட்டுள்ளன. அவை பழகிய பிறகு ஒன்றாக விடப்படும். விரைவில் வெளிநாட்டில் இருந்து வரிக்குதிரை மற்றும் அமெரிக்க புலி ஆகியவையும் திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வர உள்ளன. அனுமன் குரங்கு பூங்காவுக்குள் உள்ள மரத்தில்தான் அமர்ந்துள்ளது. மரத்தின் கீழ் பகுதியில் குரங்குக்கு தேவையான உணவுகள் வைக்கப்பட்டுள்ளன. தேவையானால் கூடுதல் அனுமன் குரங்குகள் மீண்டும் கொண்டுவரப்படும்" என்றார்.
Gray langur (Hanuman monkey) escapes from Thiruvananthapuram zoo. Exclusive visual. #TrivandrumZoo #HanumanMonkey @24onlive pic.twitter.com/ihzKItmz3v
— Adil Palode (@PalodeAdil) June 15, 2023
மேலும் படிக்க கேரளா: கூண்டிலிருந்து தப்பிய அனுமன் குரங்கு... சிங்கங்களுக்கு லியோ, நைலா என பெயர் வைத்த அமைச்சர்!