முருகப் பெருமானின் ஜன்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர தினமே வைகாசி விசாகப் பெருந்திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. விசாகத் திருநாளில் முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபடுவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதிகம். இத்தகைய பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 2-ம் தேதி நடக்கிறது. தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான்.

பங்குனி மாதத்தின் ‘உத்திரம்’, தை மாத’ பூசம்’ போல, கார்த்திகை மாதத்தின் ‘கார்த்திகை’ போல, வைகாசி மாதத்தில் ‘விசாகம்’ முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாள்.இந்த நாளில் அரளி, செம்பருத்தி, ரோஜா போன்ற சிவப்பு நிற மலர்களை அர்ச்சித்து வழிபட்டு கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகிறது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும் என்கிறார்கள்.
வைகாசி விசாக நிகழ்வுகள்:
இன்று அதிகாலை நள்ளிரவு 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை சிறப்புடன் நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் அதிகாலை 2.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. அதிகாலை 3 மணி முதல் 8.30 மணி வரை கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

காலை 9 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறும். இதையொட்டி சிறப்பு தீபாராதனை நடக்கும். மாலை 4 மணிக்கு மூலவர்க்கு சாயரட்சை தீபாரதனை நடைபெறும்.
மாலை 4.30 மணி உற்சவர் சுவாமி ஜயந்திநாதர், தங்கசப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வர். மாலை 6 மணிக்கு வைகாசி விசாக நிகழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த முனிக்குமார்களுக்கு சாபவிமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் எழுந்தருளி வீதியுலாக் கண்டருள்வார்.
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மட்டுமில்லாமல் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாதயாத்திரையாகத் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். ஆங்காங்கே பக்தர்கள் குழுமி முருகனின் பாடல்களைப் பாடலாகப் பாடியும், ஆடியும் வருகிறார்கள்.

திருச்செந்தூரில் திரும்பும் திசையெங்கும் ’அரோகரா’ கோஷம் விண்ணை முட்டுகிறது. கடல் மற்றும் நாழிகிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் முடி காணிக்கை செலுத்தியும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.
மேலும் படிக்க வைகாசி விசாகம்; திருச்செந்தூரில் நடக்கும் சிறப்பு நிகழ்வுகள் என்னென்ன?