2014-ம் ஆண்டு, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க எதிர்கொண்டது. அந்தத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று மோடி பிரதமரானார். இரண்டாவது முறையாக, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க வெற்றிபெற்றது.

தற்போது, ஒன்பது ஆண்டுகளாக பிரதமராக இருந்துவரும் மோடிக்கு நிகரான தலைவர்கள் இந்தியாவில் இல்லை என்று பா.ஜ.க-வினர் சொல்லிவிருகிறார்கள். இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசித்துவருவதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் எதிர்க் கட்சிகள், பா.ஜ.க அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டிவருகின்றன. அதற்கான முன்முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டிருக்கிறார். பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட சில கட்சிகள் தவிர, மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜூன் 23 கூட்டத்தில் பங்கேற்கவிருக்கின்றன. ஆனால், அந்த அணிக்கு தலைமை தாங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக, பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
தேர்தலில் அதிகமான எம்.பி-க்களைப் பெறுகிற கட்சியைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கே அதிக எம்.பி-க்கள் கிடைக்கும். எனவே, காங்கிரஸ் கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் ஆலோசனை நடப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு விருப்பம் இல்லை. இதற்கு முன்பு, காங்கிரஸுடன் கூட்டணி வைக்கவே மம்தா பானர்ஜி போன்றவர்கள் விரும்பவில்லை. ஆனால், கர்நாடகா வெற்றியால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்த பிறகுதான், காங்கிரஸ் கட்சி தொடர்பான மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றியில் கார்கேவுக்கு முக்கியப் பங்கு உண்டு. நீண்டகாலமாக அரசியலில் இருந்துவரும் கார்கே, ஒன்பது முறை எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். இரண்டு முறை மக்களவை எம்.பி-யாக இருந்த அவர், தற்போது மாநிலங்களவை எம்.பி-யாக இருக்கிறார். அனைத்துக் கட்சியினராலும் மதிக்கக்கூடிய, இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக கார்கே இருக்கிறார்.

மல்லிகார்ஜுன கார்கே, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தலைவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே தேர்வுசெய்யப்பட்டதால், பட்டியலின சமூகத்தினர் மத்தியில் காங்கிரஸுக்கான ஆதரவு அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். கர்நாடகா மக்கள்தொகையில் 17 சதவிகிதம் பட்டியலின சமூகத்தினர் இருக்கும் நிலையில், அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெருமளவிலான பட்டியலின வாக்குகளை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. தேசிய அளவில் சுமார் 17 சதவிகிதம் பேர் பட்டியலின சமூகத்தினர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தியாவில் அதிகமாக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், 20 சதவிகிதத்துக்கு மேல் பட்டியலின சமூகத்தினர் இருக்கிறார்கள். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி ஏற்கெனவே அங்கு முதல்வராகியிருக்கிறார். தற்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் செல்வாக்கு சரிந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் பக்கம் பட்டியலின வாக்குகள் திரும்பும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கணக்குப் போடுகிறார்கள்.

வலிமையான தலைவர், செல்வாக்கு மிகுந்த தலைவர், அசைக்க முடியாத தலைவர் என்றெல்லாம் பிரதமர் மோடியை பா.ஜ.க-வினர் வர்ணிக்கிறார்கள். ஆனால், கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில், ‘மோடி, விஷப்பாம்பு போன்றவர்’ என்ற கடுமையான விமர்சனத்தை கார்கே முன்வைத்தார். அந்த விமர்சனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதற்கு பதிலடி கொடுத்து பேசிய மோடி, ‘காங்கிரஸ் கட்சி என்னை 91 முறை இழிவாகப் பேசியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் என்னை இழிவுசெய்யும்போது, காங்கிரஸ் கட்சிதான் அழிந்துபோகிறது’ என்றார். ஆனால், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியையே பெற்றது. கார்கே-வை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால், அது ஒரு சிறந்த முடிவாக இருக்கும் என்று பா.ஜ.க எதிர்ப்பு நிலை கொண்ட அரசியல் நோக்கர்கள் கூறிவருகிறார்கள்.
மேலும் படிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கார்கேவை பிரதமர் வேட்பாளர் ஆக்குகிறதா காங்கிரஸ்?!