ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் ஊழல், முறைகேடு, விலைவாசி உயர்வைக் கண்டித்தும், அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கியிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுக்க நேற்றைய தினம் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க சார்பில், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்துக்கு, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தலைமை வகித்தார். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தங்கமணி, "அமலாக்கத்துறை சோதனையில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அவர்களிடமிருந்து தப்பிக்கத்தான் உடல்நிலை சரியில்லை என்று நாடகமாடுகிறார். செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் அவரை காப்பாற்ற நினைக்கிறார். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டால், தமது குடும்பத்துக்கு ஆபத்து வந்துவிடும். எல்லா உண்மைகளும் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தின் காரணத்தினாலேயே, அவரைக் காப்பாற்ற துடிக்கின்றனர்.

தனது குடும்பத்தில் தயாளு அம்மாள், கனிமொழி, மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராஜா ஆகியோர் விசாரணையில் சிக்கி கைதானபோது பதறாத மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பமும், இப்போது செந்தில் பாலாஜிக்காக இப்படி பதறுவது ஏன்... டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களை அந்த மாநில முதலமைச்சர்கள் பதவி நீக்கம் செய்தனர். ஆனால், தமிழகத்தில் செந்தில் பாலாஜியைப் பதவி நீக்கம் செய்யாதது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தவறு செய்பவர்கள் நீதிமன்றத்தில் தப்பிக்கலாம். மக்கள் மன்றத்தில் தப்பிக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தற்போதைய ஆட்சியில் இரவு நேரங்களில் பெண்கள் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. எங்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதற்கு அரசும் ஆதரவாக உள்ளது. இதற்கு உதாரணமாக, கள்ளச்சாராய உயிரிழுப்புக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணமும், விபத்து உயிரிழப்புக்கு ரூ.3 லட்சம் மட்டும் நிவாரணம் வழங்குவதை எடுத்துக்கொள்ளலாம். இதனால், மக்களுக்கு ஆட்சியின்மீது வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆட்சி கொள்ளையடிப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று செயல்படுகிறது. அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். இதுதான் ஜனநாயகமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படியோ தவறான வாக்குறுதியளித்து வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனால், இப்போது மக்கள் இந்த ஆட்சியின்மீது வெறுப்பில் இருக்கின்றனர்.

அ.தி.மு.க ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது, மின்கட்டணம் மட்டுமின்றி, வைப்புத்தொகை என்ற பெயரிலும் தாறுமாறாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், சிறுதொழில்கள் பாதித்திருக்கின்றன. 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் எத்தனை திட்டங்களைச் செய்திருக்கிறோம் எனச் சொல்லமுடியும். ஆனால், தி.மு.க- வின் இந்த இரண்டு ஆண்டுக்கால ஆட்சியில் என்ன செய்தது எனச் சொல்லமுடியுமா... அ.தி.மு.க ஆட்சி சட்டத்தின் ஆட்சி. இது மக்கள் விரோத ஆட்சி. சிறப்பான ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு மக்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அப்போதுதான், மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமையும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க வெல்வது உறுதி" என்றார்.
மேலும் படிக்க "நீதிமன்றத்தில் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் முடியாது..!" - செந்தில் பாலாஜியைச் சாடிய தங்கமணி