கர்நாடகா காங்கிரஸ் அரசு, பள்ளிப்பாட திட்டங்களில் பா.ஜ.க சேர்த்த, சாவர்க்கர் தொடர்பான கவிதை, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் தொடர்பான பாடம் என, பல பாடங்களை நீக்கியுள்ளனர்.
கர்நாடகத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி பெற்று முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றுள்ளார். காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின், பா.ஜ.க கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டம் திரும்ப பெறுதல், பல்வேறு திட்டங்கள் டெண்டர்களை மறு பரிசீலனை செய்தல் என, பல்வேறு நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
தேர்தலின் போது பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுமெனவும், சமூக நீதி நிலைநாட்டப்படுமெனவும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்த நிலையில், பள்ளிப்பாட புத்தகங்களில் பா.ஜ.க சேர்த்த, வலதுசாரி தொடர்பான பாடங்களை நீக்கி உத்தரவிட்டுள்ளதால், பா.ஜ.கவினர் அதிருப்தியில் உள்ளனர்.

இரு நாள்களுக்கு முன்பு, கர்நாடகா பள்ளிப்பாட புத்தகங்களில் மாற்றம் கொண்டு வர கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின், 6 – 10ம் வகுப்பு வரையிலான கன்னடா மற்றும் சமூக அறிவியல் பாட புத்தகங்களில், 18 மாற்றங்கள் கொண்டு வர அரசு உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க சேர்த்தது என்னென்ன?
பா.ஜ.க ஆட்சியின் போது, பாடநூல் திருத்தக்குழுவில் இருந்த வலதுசாரி சிந்தாந்தத்தை பின்பற்றும் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான குழுவினர், பள்ளிப்பாடத்திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் தொடர்பான பாடம் மற்றும் சாவர்க்கர் தொடர்பான கவிதையை சேர்த்தனர்.

மேலும், நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய, ‘என் மகளுக்கு கடிதம்’ என்ற பாடத்தை நீக்கிவிட்டு, ‘Bhoo Kailasa’ என்ற பாடத்தை சேர்த்தினர்.
இந்த மாற்றங்கள் குறித்து அப்போதைய எதிர்கட்சியான காங்கிரஸ், ‘பா.ஜ.க பள்ளி மாணவர்களிடம் இந்துத்துவத்தை வளர்க்க நினைக்கிறது,’ என, கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் தற்போது, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவரின் ‘யார் ஒரு சிறந்த மனிதராக இருக்க வேண்டும்’ என்ற பாடத்தை நீக்கிவிட்டு, இதற்கு பதிலாக, சிவகோட்டாச்சார்யா எழுதிய ‘சுகுமார சுவாமியின் கதை’ என்ற பாடத்தை சேர்த்துள்ளது. மேலும், சாவர்க்கர் தொடர்பான கவிதைகள், ‘Bhoo Kailasa’ ஆகிய பாடங்களை நீக்கி விட்டு, நேருவின் ‘என் மகளுக்கு கடிதம்’ பாடத்தை சேர்த்துள்ளனர்.
புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்!
ஒட்டுமொத்தமாக, இந்துத்துவா பின்னணி கொண்ட, அனைத்து பாடங்களையும், வலதுசாரி எழுத்தாளர்களின் கவிதைகளையும் காங்கிரஸ் அரசு நீக்கியுள்ளது. மேலும், புதிய பாடத்திட்டங்களான, வேத கலாசாரம், புதிய மதங்களின் எழுச்சி, பெண் சுதந்திர போராட்ட வீரர்கள், பெண் சமூக சீர்திருத்தவாதிகள் உள்ளிட்ட பாடங்களை புதிதாக அறிமுகம் செய்துள்ளனர்.

‘துரதிருஷ்டவசமானது’
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய, போக்குவரத்துத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘டாக்டர் ஹெக்டேவர், சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பாடத்திட்டங்களை, கர்நாடகா அரசு அகற்றியுள்ளது துரதிருஷ்டவசமானது. இதை விட வேதனையானது எதுவுமில்லை,’’ என, தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளதை பலதரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக வலதுசாரி மற்றும் இந்துத்துவ பாடத்திட்டங்கள் அகற்றப்பட்டுள்ளதால், பா.ஜ.க தலைவர்கள் அதிருப்தி அடைந்து, காங்கிரஸை சாடி வருகின்றனர்.
மேலும் படிக்க சாவர்க்கர், ஹெட்கேவர் பாடங்கள், பள்ளி புத்தகங்களில் இருந்து ‘கட்’ - கர்நாடகா காங்கிரஸ் அரசு உத்தரவு