சமீபத்தில், நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்ததுவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்க, குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளும் கூட இதனால் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கேற்ப, இப்போது இளவயது மாரடைப்பு குறித்த செய்திகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.
குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணர் கோவினி பாலசுப்பிரமணி விளக்கமளிக்கிறார்.
``தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, ஒரே இடத்தில் அமர்ந்து எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால் இப்பொழுது உள்ளங்கையில் உலகமே இருப்பதால், அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து அனைத்து வேலைகளையும் செய்து வருகிறோம். இது ஒரு விதத்தில் நேரத்தை மிச்சப்படுத்தி உற்பத்தித் திறனை மேம்படுத்துகிறது. இருப்பினும் இந்த மாதிரியான வாழ்க்கை முறை, பல்வேறு கடுமையான நோய்களுக்குக் காரணமாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதும் ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. குழந்தைகள் ஓடியாடி விளையாடிய காலகட்டத்தில், அவர்களுக்கு எந்தவிதமான தீவிர நோயும் ஏற்பட்டதில்லை. ஆனால் மொபைல்போன், வீடியோ கேம்ஸ் போன்றவற்றால் குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து அதை பார்த்துக் கொண்டு, அதில் நேரத்தை செலவிடுகிறார்கள்; வெளி விளையாட்டுகளையும் தவிர்க்கிறார்கள். இப்படி உட்கார்ந்தபடி சௌகர்யமாக இருப்பதே பல நோய்களுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது.
உணவைப் பொறுத்தவரை அந்தக் காலகட்டத்தில் சிறுதானியங்கள், தானியங்கள், முளைக்கட்டிய பயிர், பழங்கள், காய்கறிகள் என ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தனர். ஆனால் இக்காலகட்டத்தில் தெருவிற்கு இரண்டு பிரியாணிக்கடை, இரண்டு ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் என இருக்கின்றன. வாழ்க்கை முறையோடு சேர்த்து நமது உணவு முறை மாற்றமும் பெரியளவில் உடல் நலனை பாதிக்கிறது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதாலும், உடலுக்குக் கெடுதியான உணவுகளை உட்கொள்வதாலும் தேவையற்ற கொழுப்புகள் உடலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் ஒபிசிட்டி போன்ற கடுமையான பாதிப்புகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுகிறது.

இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு அடுத்த காரணியாக இருப்பது, சிறு வயதில் சர்க்கரை நோய். சராசரியாக ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு முதல் மூன்று சதவிகித மாணவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது. உடற்பயிற்சியின்மை, துரித உணவுப் பழக்கம், குடும்ப உறுப்பினருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு, 30-ஐ கடந்த பி.எம்.ஐ போன்றவை சிறுவயதில் சர்க்கரை நோய்க்குக் காரணமாக அமைகிறது. இந்த சிறு வயது சர்க்கரை நோயை முன்கூட்டியே அறிந்து, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிறு வயது மாரடைப்பு போன்ற கடுமையான நோய்க்கு இந்த சிறு வயது சர்க்கரை நோய், வாய்ப்பாக அமையக்கூடும்.
முன்பெல்லாம் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு நேரம் இருந்தது. உடற்பயிற்சி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உடற்பயிற்சியையும், உடல் செயல்பாடுகளையும் கற்றுக் கொடுப்பார்கள். உடற்பயிற்சிகளை செய்த பின், மாணவர்களுக்கு நன்கு பசியெடுக்கும். அப்போது, ஆரோக்கியமான உணவினை கொடுத்து வந்ததால் ஆரோக்கியமான உடல் இருந்தது.
பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் சைக்கிள் அல்லது நடந்தோ சென்று வந்தனர். இப்போது பள்ளிகளில் விளையாட்டு நேரம் இருப்பதில்லை; பள்ளிகளுக்குச் செல்ல வேன், பஸ் போன்ற வாகன வசதிகளையே பலரும் சார்ந்துள்ளனர். உடல் உழைப்பும், ஆரோக்கியமான உணவும் இல்லாததும், இளம் வயதில் மாரடைப்புக்கு வாய்ப்பாக அமைகிறது.
பொதுவாகவே மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் மன அழுத்தம் ஒரு காரணமாகும். முறையற்ற வாழ்க்கை முறை, முறையற்ற உணவுப் பழக்கம், ஸ்மார்ட்ஃபோன் அடிக்ஷன் போன்றவை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மன அழுத்தத்தை தருகிறது.
புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடனே மாரடைப்பை ஏற்படுத்தாது. ஆனால் தொடர்ந்து புகைப்பிடித்தாலோ, மது அருந்தினாலோ மாரடைப்பு பாதிப்பு ஏற்படக் கூடும்.
முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் கடுமையான பாதிப்புகளை கண்டறிய, முகாம்கள் (Mass screening) அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்வார்கள்.

இப்படி மேற்கொள்ளும்போது, மாணவர்களிடையே எந்த மாதிரியான நோய்கள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தொடக்கத்திலேயே சரி செய்வது என்பது போன்றவற்றிற்கு அவர்களுக்கு வழிகாட்டல்களும் கிடைத்தன. ஆனால் இப்போது பள்ளிக்கூடங்களில் பரிசோதனை முகாம்கள் முன்பு போல் நடப்பதில்லை. நோய்க்கான அறிகுறி ஏற்பட்ட பின், அதற்கான சிகிச்சையை செய்வதை விட, நோய் ஏற்படுவதற்கு முன்பே அடிப்படை பரிசோதனைகளை அந்தந்த காலகட்டத்தில் செய்வதால், நோய் பாதிப்பிலிருந்து தப்ப முடியும். வருமுன் காப்பதுதான் எந்த ஒரு நோய்க்கும் சிறந்த மற்றும் முதல் சிகிச்சையாக அமைகிறது" என்கிறார் மருத்துவர் கோவினி.
மேலும் படிக்க இளவயது மாரடைப்பு: `உட்கார்ந்தே இருப்பதே பல நோய்களுக்குக் காரணம்'- தீர்வைச் சொல்லும் மருத்துவர்