மத்திய அரசுக்குச் சொந்தமான, நம் நாட்டின் முக்கியமான பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ரூ.89,000 கோடி அளவுக்குப் புதிதாக முதலீடு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொலைத்தொடர்புக்கான தேவை உருவானபோது பி.எஸ்.என்.எல்-தான் அதை சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்றது. ஆனால், 90-களுக்குப் பிறகு, தொலைத்தொடர்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியபின், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குத் தரப்பட வேண்டிய முக்கியத்துவம் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டது. இதனால் மிகச் சில ஆண்டுகளிலேயே நஷ்டம் தரும் நிறுவனமாக அது மாறியது.
தற்போது மீண்டும் இந்த நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்து, எப்படியாவது அதை மறுமலர்ச்சி அடையச் செய்துவிட வேண்டும் என மத்திய அரசாங்கம் நினைக்கிறது. இப்படி நினைப்பதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால், இந்த நிறுவனத்தின் இன்றையை நிலை குறித்த சில உண்மைகளையும் கவனிக்கத் தவறக்கூடாது!
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நிகர விற்பனை கடந்த 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் சுமார் ரூ.17,500 கோடிக்கு என்கிற அளவில் இருந்தது, கடந்த 2023-ல் ரூ.19,000 கோடிக்குமேல் உயர்ந்திருப்பது பாசிட்டிவ்வான விஷயம். ஆனால், இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு (Market share) கடந்த நான்கு ஆண்டுகளில் 11%, 9% எனப் படிப்படியாகக் குறைந்து, 2023-ல் 7.5 சதவிகிதமாக உள்ளது. தவிர, இந்த நிறுவனத்தின் நஷ்டமும் அதிகரித்து வருகிறது. 2023-ல் இதன் நஷ்டம் 2022-ம் ஆண்டைவிட 17% உயர்ந்து, ரூ.8,162 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்து பண இழப்பை (cash loss) சந்தித்து வருவதுடன், கடந்த 14 ஆண்டுகளாக நிகர அளவிலும் நஷ்டம் கண்டு வருகிறது. அதே சமயம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நிகர விற்பனையானது ரூ.2 லட்சம் கோடியில் இருந்து, ரூ.2.32 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதைக் கவனிக்காமல் இருக்க முடியாது.
ஆக, தொடர்ந்து நஷ்டத்தைத் தந்துவரும் ஒரு நிறுவனத்தில் இத்தனை ஆயிரம் கோடியை முதலீடு செய்வது ஏன் என்கிற கேள்வி எழாமல் இல்லை. மத்திய அமைச்சரவைக் குழு தீர்க்கமாக யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறது எனில், இந்த நிறுவனத்தை லாபப் பாதைக்கு எப்படிக் கொண்டுவரப்போகிறது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்வது அவசியம்.
கடந்த காலத்தில் ஏர் இந்தியாவை மீண்டும் உயிர்ப்பிப்பதாகச் சொல்லி, பல ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்து, மக்களின் வரிப்பணம் பாழாய்ப் போனதுதான் மிச்சம். அது மாதிரி, பி.எஸ்.என்.எல் விஷயத்திலும் நடந்துவிடக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு!
- ஆசிரியர்
மேலும் படிக்க இன்னொரு ஏர்-இந்தியாவாக பி.எஸ்.என்.எல் மாறக்கூடாது!