குடும்பத் தகராறில் மாற்றுத்திறனாளி ஒருவர், தன் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் பேசுகையில், "ராஜபாளையம் அருகே மேலஆவாரம்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன்(வயது 34), வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி.

இவரின் இரண்டாவது மனைவி பாண்டிச்செல்வி(23). இந்த தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில், கணவன் - மனைவி இடையே நடத்தை சந்தேகம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறு காரணமாக பாண்டிச்செல்வி, ஒத்தப்பட்டியில் உள்ள அவரின் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்து அங்குச்சென்ற மதிமன்னன், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில், கீழேக்கிடந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மனைவி பாண்டிச்செல்வியை, மதிமன்னன் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து ரத்தவெள்ளத்தில் பாண்டிச்செல்வி கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராஜபாளையம் வடக்கு போலீஸார், பாண்டிச்செல்வியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாண்டிச்செல்வி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரின் உடல், கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், காவல்நிலையத்தில் சரணடைந்த மதிமன்னனை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மதிமன்னனை இரவில் ராஜபாளையம் அரசுமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற மதிமன்னன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். அவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. இதற்கிடையில், மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்ததில், மதிமன்னன் தப்பிச்செல்லும் வீடியோக்காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனைக் கொண்டு அவரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்றனர்.
மேலும் படிக்க நடத்தையில் சந்தேகம்; மனைவி குத்திக்கொலை; போலீஸ் பிடியிலிருந்து தப்பியோடிய கணவர்! - தேடும் போலீஸ்