Doctor Vikatan: என் மாமனாருக்கு 70 வயதாகிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உள்ளவர் என்பதால் இன்ஹேலர் உபயோகிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. இன்ஹேலர் உபயோகிப்பது அடிக்ஷனாக மாறிவிடாதா... சில நேரங்களில் இன்ஹேலர் உபயோகித்தாலும் அவருக்கு உடனடியாக வீஸிங் சரியாவதில்லை. அப்படியானால் இன்ஹேலர் பலன் தரவில்லை என அர்த்தமா? இன்ஹேலருக்கு பதில் நெபுலைஸர் உபயோகிக்கலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி

இன்ஹேலர், நெபுலைஸர் இரண்டும் வேறு வேறு கிடையாது. மருந்தை காற்றோடு கலந்து உள்ளே செலுத்துவதுதான் இரண்டும். இன்ஹேலரில் இரண்டு வகை உண்டு. மீட்டர்டு டோஸ் இன்ஹேலர் (Metered dose inhalers). இதை வாய் அருகே வைத்து அழுத்தி உபயோகிக்க வேண்டும். இன்னொன்று டிரை பவுடர் இன்ஹேலர்( Dry powder inhalers ). இதில் மருந்துள்ள கேப்ஸ்யூலை வைத்து அழுத்தினால் ஓட்டை போடப்படும். அதை வாயில் வைத்து உறிஞ்ச வேண்டும்.
பொதுவாக இந்த இரண்டையும்தான் ரெகுலர் உபயோகத்துக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்போம். ஆனால் மீட்டர்டு டோஸ் இன்ஹேலர் பயன்படுத்துவதில் பலருக்கும் ஒருவித குழப்பம் இருக்கிறது. அதைச் சரியாக உபயோகிக்கத் தெரிவதில்லை. கண்களை மூடிக்கொண்டு அழுத்துவார்கள். மருந்தெல்லாம் காற்றில் வெளியே போய்விடும். 'பல மாசமா யூஸ் பண்றேன்... ஒரு பிரயோஜனமும் இல்லை டாக்டர்' என்று வருவார்கள். கோளாறு உபயோகித்த விதத்தில் இருப்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள்.
மாத்திரை என்கிறபோது விழுங்கியதும் அது உள்ளே போய்விடும். அதுவே இன்ஹேலரை முறையாக உபயோகிக்காவிட்டால் மருந்து உள்ளேயே செல்லாது, நிவாரணமும் இருக்காது. எனவே இன்ஹேலர் டெக்னிக் என்பது மிக முக்கியம். சிலருக்கு எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் இன்ஹேலரை சரியாக உபயோகிக்கத் தெரியாது. அதற்காக 'சிங்க்ரனைஸ்டு இன்ஹேலர்' வந்திருக்கிறது. அதாவது மூச்சை இழுக்கும்போதுதான் மருந்து உள்ளே போகும். இதே போல 'ஸ்பேசர்' என ஒன்றும் இருக்கிறது. தவறாக உபயோகப்படுத்தி, மருந்து வெளியே வீணாவதை இது தடுக்கும்.
நெபுலைஸருக்கும் இன்ஹேலருக்கும் என்ன வித்தியாசம் என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். நெபுலைஸர் உபயோகிக்க நோயாளி எந்த முயற்சியையுமே எடுக்கத் தேவையில்லை. தீவிர மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு இன்ஹேலர் உபயோகிக்கும் அளவுக்கு ஆற்றல் இருக்காது.

குழந்தைகள், வயதானவர்கள், நரம்பியல் பாதிப்புள்ளவர்களுக்கு இன்ஹேலர் உபயோகிக்க முடியாத நிலையில் நெபுலைஸர் பயன்படுத்தப்படும். இந்தக் காரணங்கள் தவிர மற்றவர்களுக்கு நெபுலைஸர் பரிந்துரைக்கப்படாது.
இன்ஹேலர் வழியே செலுத்தப்படும் மருந்தின் அளவு, மாத்திரை மற்றும் ஊசியைவிடக் குறைவு என்பதால் அதுதான் பக்கவிளைவுகள் அற்றது. அது அடிக்ஷனாக மாறவெல்லாம் வாய்ப்பில்லை. கவலை வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க Doctor Vikatan: பல வருடமாகத் தொடரும் இன்ஹேலர் உபயோகம்... அடிக்ஷனாக மாற வாய்ப்பு உண்டா?