தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.ம.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மேடையில் சமாதானப் புறாவை பறக்க விட்டார். ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அ.ம.மு.கவினர் தினகரனுடன், ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் போட்டோவை போட்டு பிளக்ஸ் போர்டு வைத்திருந்தனர். தினகரன் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே மேடைக்கு வந்து விட்டார் வைத்திலிங்கம். கடந்த வாரம் நடைபெற்ற வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் ஓ.பி.எஸ் உடன் சேர்ந்து கலந்து கொண்டார் தினகரன்.
அதே போல் நேற்றைய கூட்டத்தில், வைத்திலிங்கம் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. டி.டி.வி.தினகரனுக்கு சால்வை அணிவித்த பின்னர் வைத்திலிங்கம் பேசியதாவது, ``சுயநலக்காரான எடப்பாடி பழனிசாமியால் தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொன்னதை அவர் கேட்டிருந்ததால், அ.தி.மு.க தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருக்கும். தற்போது தி.மு.க ஆட்சி எப்போது போகும் என மக்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் 524 அறிவிப்புகளை வெளியிட்ட தி.மு.க ஒரு அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை.

தி.மு.க ஆட்சியில், மின்சார வெட்டு, கள்ளச்சாரயம் என நாடு சீரழிந்துக்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, பட்டத்தாரி பெண்களுக்கு 50 ஆயிரம், லேப்டாப் உள்ளிட்ட திட்டங்கள் தற்போது கிடையாது. ஸ்டாலின் வருகிறார், விடியல் தருகிறார் என சொன்னார்கள். ஆனால், விடியா அரசாக தி.மு.க அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
எங்களை எதிரிகள் நெஞ்சில் குத்தினால் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், துரோகிகள் அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுத்து விட்டார்கள். அதை நிறைவேற்ற அ.தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும். தமிழகத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு ஓ.பி.எஸ், தினகரன் இருவரும் அடித்தளமிட்டுள்ளனர். நிச்சயம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.முக. அ.ம.மு.க அமோக வெற்றிப்பெறும்.

அ.தி.மு.க ஒன்றாக இணைய, யார் தடையாக இருந்தாலும், அவர்கள் துாக்கி வீசப்படுவார்கள். தொண்டர்களால் அவமானப் படுத்தப்படுவார்கள். அதிகாரம், பணம் இருக்கிறது என நினைக்கிறார்கள். தொண்டர்கள் தான் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் இல்லை என்றால், ஒரு தொகுதியில் கூட அவரால் ஆயிரம் வாக்கு கூட வாங்க முடியாது.
நாங்கள் கத்திரிக்கோல் சின்னத்தில் தேர்தலில் நிற்க தயார். எடப்பாடி பழனிசாமி பிளேடு சின்னத்தில் நிற்க தயாரா? அப்படி நின்று எங்களை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கி விட்டால், அ.தி.மு.கவை விட்டு நாங்கள் விலகி விடுகிறோம். ஒரத்தநாட்டிற்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி வைத்திலிங்கம் ஒன்றும் செய்யவில்லை என பேசியிருக்கிறார்.

நான் அ.தி.மு.க.,வில் ஒரு இடத்தை பிடிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் சசிகலா, திவகாரன் தான். ஜெயலலிதாவிடம் கூறி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கால்நடை, வேளாண், பொறியியல் கல்லுாரிகள் என பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். தஞ்சாவூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளேன். எடப்பாடி பழனிசாமி, சேலம், எடப்பாடி பகுதிக்கு செய்ததை விட அதிகமாக நான் தஞ்சாவூரில் செய்திருக்கிறேன். அ.தி.மு.க, அ.ம.மு.க இணைந்து செயல்பட்டு 2026ல் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்” என்றார்.
மேலும் படிக்க `கத்திரிக்கோல் vs பிளேடு; எடப்பாடி ஒரு வாக்கு அதிகம் பெற்றால்கூட...’ - அமமுக மேடையில் வைத்திலிங்கம்