தென்காசி மாவட்டம் புளியங்குடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் பலரும் இந்தப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் புளியங்குடி கீழத்தெருவைச் சேர்ந்த கருப்பசாமி - மாரியம்மாள் தம்பதியரின் மகள் முனீஸ்வரி (15) பிளஸ் ஒன் படித்து வந்தார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முனீஸ்வரி இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை கருப்பசாமி இறந்துவிட்டதால் தாய் மாரியம்மாளின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார். தாய் கூலி வேலைக்குச் சென்று முனீஸ்வரியை பள்ளியில் சேர்த்துள்ளார். இந்த நிலையில் பள்ளியில் அவரை ஆசிரியை திட்டியதாகத் தெரிகிறது. அதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அவர் தவறான முடிவை எடுத்துள்ளதாக சகமாணவிகள் வருத்தம் தெரிவித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியை விடுப்பில் இருப்பதால் பொறுப்பு தலைமையாசிரியை அவரை கடுமையாகத் திட்டியதாகவும் சக மாணவிகள் முன்னிலையில் நடந்த அந்தச் சம்பவத்தால் முனீஸ்வரி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. அதனால் வீட்டுக்கு வந்தபோது மிகுந்த மன இறுக்கத்துடன் இருந்திருக்கிறார்.
பின்னர் வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன், தற்கொலை செய்த மாணவியின் பை உள்ளிட்டவற்றைச் சோதனையிட்டனர். அப்போது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸாரின் கையில் சிக்கியுள்ளது.
இரண்டு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில் மாணவி முனீஸ்வரி, “என்னை ஆசிரியை நீலாம்பிகை கடுமையாகத் திட்டினார். பள்ளி அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு தாமதமாக வகுப்பறைக்கு வந்ததற்காக என்னை ஒரு பாடவேளை முழுவதும் வெளியில் நிறுத்திவிட்டார்கள். அது எனக்கு மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

அத்துடன், மாலையில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கூட்டிச் சென்றபோது அங்குள்ள சர்க்கஸ்காரரிடம் சக மாணவிகள் பேசிக்கொண்டிருந்தனர். நான் அருகில் நின்றதால் என்னைத் தவறாகப் புரிந்துகொண்ட ஆசிரியை, ‘தலைமை ஆசிரியை வந்ததும் உன்னை பள்ளியில் இருந்து நீக்கச் சொல்கிறேன். இனி நீ என் வகுப்புக்கு வரவே கூடாது’ எனத் திட்டினார். பள்ளிக்குச் செல்லாமல் இருந்தால் அம்மா வருத்தப்படுவார்கள். அதனால் இந்த முடிவை எடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதைப் பார்த்த உறவினர்கள் கோபம் அடைந்ததுடன் பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதோடு கல்வித் துறையினரும் பள்ளியில் விசாரணை நடத்தினர். உயிரிழந்த முனீஸ்வரி வகுப்பில் என்ன நடந்தது என்பது பற்றி சக மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து பள்ளியின் துணை தலைமை ஆசிரியை நீலாம்பிகை மீது கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். புளியங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஏற்கெனவே பாளையங்கோட்டை சிறைக்குள் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி ஓய்ந்த சில நாள்களிலேயே மாணவி தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. அதனால் மக்களிடம் பரபரப்பு நிலவுகிறது. அதைச் சமாளிக்கும் வகையில் புளியங்குடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க தென்காசி: 11-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு - ஆசிரியை திட்டியதாக எழுதிய கடிதம் சிக்கியது!