புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, 150-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். இதில், 13 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளைச் சேகரித்து தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையேதான், வேங்கைவயல் பகுதியிலிருந்து முதலில் டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆஜராகக் கோரி சி.பி.சி.ஐ.டி போலீஸார் 8 பேருக்கு சம்மன் அனுப்பிய நிலையில், 8 பேரும் சோதனைக்கு ஆஜராக விருப்பமில்லை என்று மறுப்பு தெரிவித்ததோடு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி இளங்கோகவன், ``யார், யாரை எதற்கு டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற விவரத்தை சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமளிக்க வாய்ப்பளித்து கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறி, வழக்கை முடித்து வைத்தார். இந்த நிலையில், மீண்டும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் அந்த 8 பேருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு, புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மனுமீதான விசாரணைக்கு 8 பேரும் ஆஜராகினர். அப்போது, டி.என்.ஏ பரிசோதனை தொடர்பான சம்மனை 8 பேருக்கும் நீதிமன்றம் வழங்கியது.
இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், விளக்கம் அளிக்கலாம் என்று நீதிபதி கூறியிருந்தார். இந்த நிலையில்தான், மீண்டும் 1-ம் தேதி இது தொடர்பாக விளக்கமளிக்க ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி போலீஸார் தரப்பில் விசாரணை அதிகாரி பால்பாண்டி ஆஜராகினார். அப்போது, அவர், "இந்த வழக்கினை அறிவியல்பூர்வமாக அணுகியிருக்கிறோம். டி.என்.ஏ பரிசோதனை இந்த வழக்கின் முக்கியமான ஒன்று. ஏற்கெனவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்டிருக்கிறோம். இன்னும் சிலரிடமும் மேற்கொள்ள இருக்கிறோம். இந்த 8 பேரிடமும் மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும். இதில், அவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை" என்று விளக்கமளித்தார்.

டி.என்.ஏ பரிசோதனைக்கு மறுத்த 8 பேரிடமும் நீதிபதி தனித்தனியாக விளக்கம் கேட்டார். 8 பேரும், "குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், பாதிக்கப்பட்ட எங்களையே, பரிசோதனை என்ற பெயரில் இந்த வழக்கில் சிக்க வைக்க முயல்கின்றனர். இந்த டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதில் எங்களுக்கு விருப்பமில்லை" என்று ஒரே மாதிரி விளக்கம் கொடுத்தனர். இதனைக் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கு விசாரணையை ஜூலை 4-ம் தேதி ஒத்தி வைத்திருக்கிறார்.
மேலும் படிக்க வேங்கைவயல் விவகாரம்; டிஎன்ஏ பரிசோதனைக்கு, 8 பேர் மீண்டும் மறுப்பு; ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை!