கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் மஹாராஜன் (55). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்திற்கு வேலை தேடிச்சென்றார் மஹாராஜன். திருவனந்தபுரத்தை அடுத்த வெங்கானூரில் தங்கி கிணறு தோண்டுதல், கிணறு சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்துவந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவரை திருமண செய்துகொண்டு, வெங்கானூர் பகுதியிலேயே குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு பபிதா, சபிதா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் விழிஞ்ஞம் அருகேயுள்ள முக்கோலா பகுதியில் கிணற்றை சுத்தப்படுத்துவதற்காக கடந்த சனிக்கிழமை சக தொழிலாளர்களான சேகர், கண்ணன், மோகன், மணிகண்டன் உள்ளிட்டோருடன் மஹாராஜன் சென்றுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட சுமார் 90 அடி ஆழம் கொண்ட கிணற்றிலிருந்து பழைய கான்கிரீட் வளையங்களை மாற்றி புதிதாக அமைத்து, கிணற்றை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளனர். தொடக்க பணியாக மின் மோட்டர் உள்ளிட்டவற்றை வெளியே எடுப்பதற்காக மகாராஜன் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மேல் பகுதியிலிருந்த கான்கிரீட் வளையங்களுடன், மண்ணும் சேர்ந்து கிணற்றுக்குள் விழுந்திருக்கிறது. அதில் மஹாராஜன் 90 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார். சக தொழிலாளர்கள் உடனே அவரை மீட்க முயன்றனர். ஆனால் மண் சரிந்து விழுந்துகொண்டே இருந்ததால், அவரை உடனடியாக மீட்க முடியவில்லை. இது குறித்து விழிஞ்ஞம் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்க முயன்றும் முடியாமல் போனது. சுமார் 20 அடி உயரத்துக்கு கிணற்றில் மண் இடிந்து விழுந்ததால் மஹாராஜனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஆலப்புழாவிலிருந்து 26 பேர் அடங்கிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

பேரிடர் மீட்புக்குழுவினரும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸாரும் இணைந்து 47 மணி நேரம் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இன்று காலை இறந்த நிலையில் மஹாராஜனின் உடலை பேரிடர் மீட்புப்படையினர் மீட்டனர். சேறும் சகதியுமாக மண் நிரம்பியதாலும், ஆழம் அதிகமாக இருந்ததால் ஆக்ஸிஜன் கிடைக்கமாலும் மஹாராஜன் இறந்ததாக கூறப்படுகிறது. கிணற்றை சுத்தம்செய்யச் சென்ற தொழிலாளி, மண் சரிவில் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க 90 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி; 47 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சோகம்!