`அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு அளித்த பதவி நீட்டிப்பு செல்லாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் அதிகாரியான எஸ்.கே.மிஸ்ராவை, 2018-ம் ஆண்டு, நவம்பர் 19-ம் தேதி இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குநராக மத்திய அரசு நியமித்திருந்தது. இவரின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் 2020-ம் ஆண்டு முடிந்தது. அதன் பிறகு அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அப்போதே இதை எதிர்த்து ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு வரும் நேரத்தில், அவர் பதவிக்காலம் முடிய இரண்டு மாதங்கள்தான் இருந்தன. அதனால் பதவி நீட்டிப்புக்கு உச்ச நீதிமன்றம் 2021, செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அப்போதே `அவருக்கு இதற்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது’ எனக் கூறியிருந்தது.
இந்த நிலையில், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) சட்டம் மற்றும் டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி அமலாக்கத்துறை, சிபிஐ தலைவர்களுக்கு இரண்டாண்டு பதவிக்காலத்துக்குப் பின்பு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது. இதன்படி மிஸ்ராவின் பதவிக்காலம் 2022, நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் மிஸ்ராவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, ஜூலை 11-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பில், `அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா பணி நீட்டிப்பு சட்டவிரோதம்’ என்றும், `15 நாள்களில் அமலாக்கத்துறைக்குப் புதிய இயக்குநரைப் பணி நியமனம் செய்யவும்’ நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், `புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை சஞ்சய் குமார் மிஸ்ரா ஜூலை 31 வரை பணியில் தொடரலாம்’ எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு, `மூன்றாவது முறையாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது 2021-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது’ எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துவரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``அமலாக்கத்துறை இயக்குநர் பதவி நீட்டிப்பு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு சிலர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். ஆனால், மகிழ்ச்சியடைபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். ஏனென்றால், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ இயக்குநர் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளாக மாற்றியமைத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், ஊழல் செய்பவர்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக தவறு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அமலாக்கத்துறை தவறு செய்பவர்களை விசாரணை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறது. பண மோசடி மற்றும் அந்நியச் செலாவணி சட்டங்களை மீறுதல் உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. எனவே, அமலாக்கத்துறை இயக்குநர் யார் என்பது முக்கியம் அல்ல. ஏனென்றால், இந்தப் பதவியை யார் ஏற்றுக்கொண்டாலும், இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரான மனநிலை கொண்டவர்களின் ஊழலைக் கவனித்து, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய அரசியல் பார்வையாளர் கிருத்திகா தரண் நம்மிடம் பேசும்போது, ``இன்று மத்திய புலனாய்வு அமைப்புகள், அரசு இயந்திரங்கள் யாருக்குச் சாதகமாக இருக்கின்றன என்பதைத் தெளிவாக பார்த்துவருகிறோம். தமிழ்நாட்டில் யார் மீதெல்லாம் அமலாக்கத்துறை வழக்கு பாய்ந்தது என்பதையும் பார்க்கிறோம். அவர்களால் தமிழ்நாட்டில் ஏதும் பண்ண முடியவில்லை. அதேசமயம் மகாராஷ்டிராவில் பிரதமர் பேசும்போது, ‘ஊழல் செய்தவர்கள் யாரையும் விட மாட்டோம். ரூ.70,000 கோடி ஊழல் நடந்திருக்கிறது’ என்று சொல்கிறார். அடுத்த வாரமே துணை முதல்வராக (அஜித் பவார்) அவர்கள் கட்சியையே கொண்டு வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது திட்டவட்டமாக அமலாக்கத்துறையை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது கண்ணாடிபோலத் தெரிகிறது.

வெளிப்படையாக இது போன்று தங்களுக்கு எதிரானவர்கள் மீது புலனாய்வு அமைப்புகள் ஏவப்படும்போது, இதில் சந்தேகத்துக்கு இடமில்லை. அமலாக்கத்துறை புனிதமான அமைப்பு, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் என்பதெல்லாம் உண்மையில்லை என்பது தெரியவருகிறது. தமிழ்நாட்டில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டவரை `அமைச்சராகவே இருக்கக் கூடாது’ என்று சொல்கிறார் ஆளுநர். ஆனால், மகராஷ்டிராவில் துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படுகிறது. இரு பக்கமும் பார்க்கும்போது கைப் புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு என்பது தெளிவாகிறது. அமலாக்கத்துறை மட்டுமன்றி, எல்லா அரசு இயந்திரங்களையும் தேர்தலுக்காகவோ, தேர்தல் காரணங்களுக்காகவோ, பதவிக்காகவோ, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவோ பயன்படுத்தி, ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கிவருகிறது ஆளும் மத்திய அரசு.
அமலாக்கத்துறை அதிகாரிகளை எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் உணர ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு ஓர் எச்சரிக்கை மணி அடித்திருப்பதுபோல் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது” என்றார்.
மேலும் படிக்க மத்திய அரசுக்குக் குட்டுவைத்த உச்ச நீதிமன்றம் - அமலாக்கத்துறை இயக்குநர் விவகாரத்தில் நடந்தது என்ன?!