திருப்பூரைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இந்தத் தம்பதியின் மகன் பெயர் சஞ்சய் (19), மகள் பெயர் திவ்யதர்ஷினி (8). ஜெயராஜ் துபாயிலுள்ள நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். சஞ்சய், கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திவ்யதர்ஷினி விஜயாபுரம் அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். திவ்யதர்ஷினியைப் பள்ளிக்கு தனது இருசக்கர வாகனத்தில் ராஜேஸ்வரி கொண்டு சென்றுவிடுவதும், மாலையில் மீண்டும் அழைத்து வருவதும் வழக்கம். அதேபோல், நேற்று மாலை, பள்ளியிலிருந்து திவ்யதர்ஷினியை ராஜேஸ்வரி இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்திருக்கிறார்.

நல்லிகவுண்டன்புதூர் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே ராஜேஸ்வரி வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த நல்லூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரின் வாகனம் மோதியதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில், சிறுமி திவ்யதர்ஷினியின்மீது காவல்துறை வாகனம் ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேஸ்வரி படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைப் பார்த்து அந்தப் பகுதி பொதுமக்கள் காவல் வாகனத்தை முற்றுகையிட்டு, சாலைமறியலில் ஈடுபட்டனர். காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவலர் வீரசின்னன் மதுபோதையில் இருந்ததாகக் கூறி, பொதுமக்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர். சம்பவமறிந்து அங்கு வந்த நல்லூர் காவல்துறையினர், வீரசின்னனை மீட்டு அருகிலுள்ள ஏடிஎம் அலுவலகத்தில் பாதுகாப்புடன் அமரவைத்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சிறுமியின் சாவுக்குக் காரணமான காவலரை காவல்துறையினர் காப்பாற்ற முயல்வதாகக் கூறி பொதுமக்கள் திருப்பூர்-காங்கேயம் சாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் வனிதா, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். விபத்துக்குக் காரணமான வீரசின்னன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து, சாலைமறியல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரி, உயர் சிகிச்சைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்து குறித்து காவல்துறை துணை ஆணையர் வனிதா, "முதற்கட்ட விசாரணையில் ஊர்க்காவல் படை வீரரான வீரசின்னன் காலையிலிருந்து பணியில் இருந்துள்ளார். அவரிடம் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும், வாகனத்தை கவனக்குறைவாக இயக்கி விபத்தை ஏற்படுத்தி, சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததால், வீரசின்னன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது" என்றார்.
மேலும் படிக்க காவல்துறை வாகனம் மோதி பலியான சிறுமி; கொதித்த மக்கள்... ஒரு மணி நேரம் நீடித்த மறியல்! - என்ன நடந்தது?