காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தொடர்ந்து வெற்றி பெற்ற சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில், கடந்த தேர்தலில் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போதிருந்தே கார்த்தி சிதம்பரத்துக்கும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் மோதல் போக்காகவே உள்ளது.

கடந்த ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில், ராகுல் காந்தி ஆதரவு பெற்ற மல்லிகார்ஜுன கார்கே-க்கு எதிராக ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் பணியாற்றியது தேசிய அளவில் கட்சிக்குள் எதிர்ப்பை உருவாக்கியது.

கார்த்தி சிதம்பரம் அவ்வப்போது பேசுகின்ற பேச்சும் பதிவிடுகின்ற ட்வீட்டும் கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினரால் விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வந்துள்ளது.
இந்நிலையில் கட்சியினர், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து கட்சி சின்னம், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படம் அச்சிடப்பட்டிருந்த லெட்டர் பேடில் பதில் அளித்து வந்தவர் தற்போது தன் பெயர் மட்டும் உள்ள லெட்டர் பேடில் பதில் அனுப்பி வருவதாக கூறப்படுகிறது.
இது மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கட்சி தலைவர்களின் படங்களை லெட்டர் பேடிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மானாமதுரை வட்டாரத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் கோஷ்டி மோதல் போஸ்டர் ஒட்டும் அளவுக்கு சென்றுள்ளது.
மேலும் படிக்க கார்த்தி சிதம்பரத்தை கண்டித்து போஸ்டர்... சிவகங்கை காங்கிரஸ் களேபரம்!