கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க
``நா கூசாமல் பொய் பேசியிருக்கிறார் பழனிசாமி. எப்போதுமே பா.ஜ.க-வினர்தான் இப்படிப் பொய்யையும், சொன்னதையே மாற்றிப் பேசுவதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க-வுக்கும் இந்தப் பழக்கம் வந்துவிட்டதுபோல. தன்னைப் பற்றி ஒரு கார்ட்டூன் போட்டதற்காக, சம்பந்தப்பட்ட நபரை இரவோடு இரவாகக் கைதுசெய்தவர்தானே பழனிசாமி... தமிழக வரலாற்றில் காவல்துறையினரை, தனது ஏவல்துறையாக ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தியது பழனிசாமி மட்டும்தான். அதை மக்களே நன்கு அறிவார்கள். திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பெண்மணியை நடுச்சாலையில் வைத்து கன்னத்தில் அறைந்தது, சாத்தான்குளம் தந்தை - மகனை அடித்தே கொன்றது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அராஜகங்களை அரங்கேற்றுவதைத்தான் காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுவதற்கான இலக்கணம் என்கிறாரா பழனிசாமி... அப்படியான நிகழ்வுகள் தி.மு.க ஆட்சியில் ஒருபோதும் நடக்காது. தளபதி ஸ்டாலின் ஒருபோதும் அதை அனுமதிக்கவும் மாட்டார். குற்றமிழைப்பவர்கள் சொந்தக் கட்சியினராக இருந்தாலும், காவல்துறையினராகவே இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதுதான் தி.மு.க அரசு.’’

வைகைச்செல்வன், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க
``அண்ணன் எடப்பாடியார் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது... அ.தி.மு.க ஆட்சியில் காவல்துறையினர் முழுச் சுதந்திரத்துடன் செயல்பட்டனர். இப்போது முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை இந்த ஆட்சிக்கும், அவர்களின் கட்சிக்கும் எதிராகக் கருத்து சொல்பவர்கள்மீது மட்டும்தானே நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறது... காவல்துறையின் செயல்படாத தன்மைக்கு விழுப்புரம் கள்ளச்சாராய மரணம் முக்கிய உதாரணம். மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில்தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள், கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன. முன்பு பைக்கில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டார்கள், இப்போது தைரியமாக காரில் வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் அளவுக்குத் திருடர்கள் முன்னேறியிருக்கிறார்கள். பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே வெளியே செல்லும் நிலை உருவாகியிருக்கிறது. பொதுமக்களைப் பாதுகாக்கவேண்டிய காவல்துறையை தி.மு.க-வினர் தங்களின் ஏவல்துறையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இனியும், முதல்வர் காவல்துறையைச் சுதந்திரமாகச் செயல்பட விடவில்லையென்றால், வரும் நாள்களில் அது மிகப்பெரிய சமூகச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும்.’’
மேலும் படிக்க ஒன் பை டூ: காவல்துறை செயல்பாடு குறித்த எடப்பாடி பழனிசாமியின் கருத்து சரியா?