இந்திய அளவில் பெண்கள் நலத்திட்டங்களில் தமிழக அரசு முன்னோடியாகவே இருந்துவந்துள்ளது. அவற்றில் ஒன்றுதான், 1989-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்திட்டம். தாய், சேய் ஊட்டச்சத்தை உறுதிப் படுத்தும் இத்திட்டம், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருக் கிறது என்று வரும் குற்றச்சாட்டுகள், அரசால் உடனடி கவனம் கொடுக்கப்பட வேண்டியவை.
இந்தத் திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு கர்ப்பகாலம், பிரசவத்துக்குப்பின், குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி செலுத்திய பின்னர் என மூன்று தவணைகளில் ரூ.14,000, மற்றும் ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் என ரூ.18,000 மதிப்பிலான உதவி வழங்கப்படுகிறது. ஆனால், ‘மூன்று தவணைகளும் காலம் தாழ்த்தியே கொடுக்கப்படுகின்றன. இதனால் கர்ப்பிணிகளின், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்கான திட்டம் என்ற இத்திட்டத்தின் நோக்கமே சிதைகிறது’ என்று இந்தத் திட்டத்தின் செயல்தன்மை குறித்து எப்போதுமே புகார்கள் இருந்துவருகின்றன. இந்நிலையில், ‘கடந்த இரண்டு வருடங்களாக இந்தத் திட்டத்தில் ஊட்டச்சத்துப் பெட்டகமோ, உதவித் தொகையோ வழங்கப்படவில்லை’ என்கிறார்கள், இதன் பயனாளர்களான ஏழைப் பெண்கள்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ‘இந்தத் திட்டத்தில், மத்திய அரசு வழங்கும் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதியும் சேர்த்து வழங்கப்படுகிறது. அதற்கான இணையதளப் பதிவேற்றத்தில் உள்ள சிக்கல்களால், உதவித்தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
இந்தத் திட்டம் தொடர்பான அரசு அலுவல் நடைமுறைகளோ, தொழில்நுட்பப் பிரச்னைகளோ ஆண்டுகளாக சரிசெய்யப்படாமல் இருக்கின்றன என்றால், இதன் பயனாளர்களான பெண்களுக்கு, ஏழைப் பெண்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தரவிரும்பாத முக்கியத்துவத்தை, மற்றும் அவர்கள் மீதான அலட்சியத்தையே அது காட்டுகிறது. ஏற்கெனவே, உதவித்தொகை வழங்குவதில் அலைக்கழிப்புகள், ஊட்டச் சத்துப் பெட்டகங்கள் வழங்குவதில் இழுபறி என்று கர்ப்பிணிகளும், தாய்மார்களும் புலம்பும் நிலையில்தான் உள்ளது. இந்நிலையில், திட்டமே இப்போது ஸ்தம்பித்து நிற்கிறது.
அதிக எண்ணிக்கையிலான ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான், நம் மாநில மருத்துவக் கட்டமைப்பின் பலம். அதுதான் அடித்தட்டு மக்களுக்கும் சிகிச்சை சென்று சேர வழிவகுக்கிறது. அதன் மூலமே மகப்பேறு உதவித்திட்டமும் வழங்கப்படுகிறது. இந் நிலையில், `பதிவேற்றுவதில் தொழில்நுட்பக் கோளாறு’ என்று ஆரம்பப்புள்ளியில் சிக்கலை வைத்துக்கொண்டு அரசு சாக்கு சொல்வது கண்டனத்துக்கு உரியது. தேர்தலின் போது வார்டு வார்டாக, வீடு வீடாக என ஒருவர் விடாமல், ஓர் ஓட்டு விடுபடாமல் `பரிசுப் பணம்’ கொடுக்க அரசியல் கட்சிகளால் முடிகிற நாட்டில், அரசாங்கத்தால் நலத்திட்டங்கள் தேங்குவதை என்னவென்று சொல்வது?
கர்ப்பிணிகளும், பிரசவித்த தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளப்பட வேண்டியவர்கள். அந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட திட்டமே இப்படி நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதை சுட்டிக்காட்டி செயலாற்ற வைப்போம் தோழிகளே!.
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்

மேலும் படிக்க நமக்குள்ளே... மகப்பேறு நிதியுதவித் திட்டம்... தேவை, அவசர சிகிச்சை!