காரில் வந்து ஆடு திருடிய கும்பலை கிராம மக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து, போலீஸில் ஒப்படைத்த சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், பாகனேரி சுற்றுவட்டார பகுதியில் சமீபகாலமாக ஆடுகள் திருடுபோவது அதிகரித்து வந்த நிலையில், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மக்கள், ஆடு திருடும் கும்பல் தங்கள் ஊர்பக்கம் வருகிறதா என்று கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் பாகனேரி பிள்ளைவன ஊரணி அருகே மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு ஆடுகளை, சிவப்பு நிற காரில் வந்த மூன்று பேர் கடத்த முற்பட்டனர்.

அப்போது ஆடு கத்தும் சத்தம் கேட்டு அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் காரை மறித்து கூச்சலிட்டனர். இதனால் அங்கிருந்து கிளம்பச் செல்ல வேகமாக கார் திரும்பிய நிலையில், இன்ஜின் ஆஃப் ஆனது.
கீழே இறங்கி காரை தள்ளி ஸ்டார்ட் செய்ய அவர்கள் முற்பட்டபோது, ஊர் மக்கள் திரண்டு வந்து இரண்டு பேரைப் பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடினார். காரில் இருந்த ஆட்டை மீட்டு ஆடு திருடிய இரண்டு பேரையும் புளியமரத்தில் கட்டிவைத்து போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இருவரையும் மக்களிடமிருந்து மீட்டு, விசாரணை செய்ய அழைத்துச் சென்றனர். விசாரணையில் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்கள் திருப்புவனம் அருகேயுள்ள பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், ராஜா என்பதும், தப்பி ஓடியவர் மணி என்பதும் தெரிந்தது.

தொடர்ந்து கார்களிலும் இருசக்கர வாகனங்களிலும் சிவகங்கை மாவட்டத்தில் ஆடு திருடும் சம்பவம் அதிகரித்துவரும் நிலையில், பாகனேரியில் பிடிபட்ட இருவரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க சிவகங்கை: காரில் வந்து ஆடு திருட்டு; வளைத்துப் பிடித்து மரத்தில் கட்டிவைத்த ஊர்மக்கள்!