``மணிப்பூர் மாநில வன்முறை விவகாரத்தில் அனைத்து ஆணையங்களும் செயலிழந்துவிட்டது, தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக இருப்பற்கு அருண் மிஸ்ரா தகுதியற்றவர்..." என்று மனித உரிமை செயற்பாட்டாளரும், மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குநருமான ஹென்றி திபேன் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஹென்றி திபேன், "மணிப்பூர் மாநிலத்தில் மே மாதம் முதல் குழந்தைகள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மீது மனித உரிமை மீறல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால், இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆணையங்கள் மணிப்பூர் வன்முறையை கண்டுகொள்ளவில்லை.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மணிப்பூர் கலவரம் குறித்து வேதனையை வெளிப்படுத்திய பின்புதான் தேசிய மனித உரிமை ஆணையம் மணிப்பூர் பிரச்னை குறித்த புகாரில் தாமதமாக நடவடிக்கையை தொடங்கியது.

தேசிய மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், குழந்தைகள் ஆணையம், எஸ்.சி-எஸ்.டி ஆணையம் என எந்தவொரு ஆணையமும் மணிப்பூருக்கு செல்லவே இல்லை.
தேசிய மனித உரிமை ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. அதன் உறுப்பினர் தேர்வு வெளிப்படையாக நடைபெறவில்லை என 2016-ஆம் ஆண்டில், 'தேசிய மனித உரிமை ஆணைய நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு' அங்கீகாரம் தரவில்லை. இதுபோன்று இந்த ஆண்டும் அங்கீகாரம் தரவில்லை.

அங்கீகாரம் முறையாக பெறாத ஆணையமாக தேசிய மனித உரிமை ஆணையம் உள்ளது. மிகக்குறைகளுடன் இதுபோன்று ஆணையங்கள் உள்ள நிலையில் செயல்படாமல் போனது இன்னும் கேவலமானது. தேசிய ஆணையங்கள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுகிறது.
கட்சி பதவியில் உள்ளவருக்கு மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி அளிக்கின்றார்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்துக்கு வந்த புகாரை கண்டுகொள்ளாமல் இருந்த குஷ்பு, தற்போது வேறு வேறு பிரச்னைகளை பேசுகிறார்.
மணிப்பூர் பிரச்னை விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுக்காத மனித உரிமை ஆணையத்தினர் தலைவர் அருண் மிஸ்ரா மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்யவேண்டும்.

அருண் மிஸ்ரா தேசிய மனித உரிமை ஆணையத்தலைவராக இருப்பதற்கு அருகதை இல்லை, மணிப்பூர் விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருந்த தேசிய மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், குழந்தைகள் நல ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம் , எஸ்.சி-எஸ்.டி ஆணையம் ஆகியவையும், செயல்படாத நிலையில் உள்ள அதன் உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும். மணிப்பூர் பிரச்னை குறித்து ஐநா சபையில் நிச்சயம் பேசப்படும்" என்றார்.
மேலும் படிக்க ``மணிப்பூர் குறித்து பேசாமல், வேறு பிரச்னைகளை பேசுகிறார் குஷ்பு" - குற்றம்சாட்டும் ஹென்றி திபேன்