புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியல் சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணை நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக, 150-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடையங்களை சேகரிப்பதற்காக, இறையூர் மற்றும் வேங்கைவயலைச் சேர்ந்த 21 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, இந்த வழக்கில் மேலும், இறையூரைச் சேர்ந்த 3 சிறுவர்களுக்கும், வேங்கைவயலைச் சேர்ந்த சிறுவன் ஒருவருக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுமதிக்கக் கோரி புதுக்கோட்டை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கடந்த 10-ம் தேதி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவோா் சிறாா்கள் என்பதால், அவா்களின் பெற்றோர் கருத்தை அறிய வேண்டியது அவசியம். எனவே, பெற்றோர்கள் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இறையூர் கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களின் பெற்றோர், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் பெற்றோர் ஆஜராகினர்.
இதில், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனின் சார்பில், ஆஜரான வழக்கறிஞர், சிறுவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். அதோடு, சி.பி.சி.ஐ.டி போலீஸார் சிறுவர்களிடம் சட்ட விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதாகவும் தன் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
சி.பி.சி.ஐ.டி போலீஸார் தரப்பில் அரசு வழக்கறிஞர் வாதங்களை வைத்தார். இதற்கிடையே பள்ளி சென்றுவிட்டதால், சிறுவர்கள் ஆஜராகவில்லை. இந்த நிலையில் தான், உடனடியாக அனுமதி கொடுக்காமல், விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். 14-ம் தேதி மாலை சிறுவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க வேங்கைவயல்: டி.என்.ஏ பரிசோதனை கோரிய சிபிசிஐடி... சிறுவர்கள் ஆஜராக நீதிபதி உத்தரவு!