`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ என்பது, பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
இந்த வார அத்தியாயத்துடன் ‘பச்சிளம் குழந்தை பராமரிப்பு’ மருத்துவத் தொடர் நிறைவடைகிறது. இந்த இறுதி அத்தியாயத்தில், பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் நோய்த்தொற்று மற்றும் மூச்சுத்திணறல் குறித்து விரிவாகக் காண்போம்.
பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் நோய்த்தொற்று
பச்சிளம் குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலம் போதுமான வளர்ச்சி அடைந்திராத காரணத்தினால், நோய்த்தொற்று ஏற்படவும் அதனால் தீவிர பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். பச்சிளம் குழந்தைகளில் ஏற்படும் நோய்த்தொற்றை Neonatal Sepsis என்போம்.
ரத்தத்தில் நோய்த்தொற்று, மூளைக்காய்ச்சல், நிமோனியா, எலும்பு அழற்சி மற்றும் சிறுநீர்ப்பாதைத் தொற்று ஆகியன பச்சிளம் குழந்தைகளை பாதிக்கும் செப்சிஸ் நோய்த்தொற்றுகள். செப்சிஸால், அதிகளவு பச்சிளம் குழந்தைகள் மரணங்கள் நிகழ்கின்றன. 14% பச்சிளம் குழந்தைகளுக்கு செப்சிஸ் நோய்த்தொற்று ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தை பிறந்த முதல் 72 மணி நேரத்திற்குள் ஏற்படும் நோய்த்தொற்றை ஆரம்ப தொடக்க செப்சிஸ் (Early Onset Sepsis) எனவும், 72 மணி நேரத்திற்கு பிறகு ஏற்படும் நோய்த்தொற்றை தாமத தொடக்க செப்சிஸ் (Late Onset Sepsis) எனவும் அழைக்கப்படுகின்றன. தாய்க்கு, Chorioamnionitis போன்ற நோய்த்தொற்றுகள் இருக்கும்போது, குழந்தைக்கு ஆரம்ப தொடக்க செப்சிஸ் ஏற்படும் அபாயம் அதிகம். ஆரம்ப தொடக்க செப்சிஸ் பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளுக்கு பெரும்பாலும் மூச்சுத் திணறலுடன் நிமோனியா பாதிப்பு ஏற்படும். தாமத தொடக்க செப்சிஸ் பெரும்பாலும் மருத்துவமனையில் உள்ள நோய்க்கிருமிகள் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும்.

தாழ்வெப்பநிலை, காய்ச்சல், சரியாக தாய்ப்பால் குடிக்காதது, மூச்சுத்திணறல், குறைந்த அல்லது அதிக இதயத் துடிப்பு, குறைந்த அல்லது அதிக ரத்தச் சர்க்கரை அளவு ஆகியன பச்சிளம் குழந்தைகளில் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருந்தால், நோய்த்தொற்றை உறுதிப்படுத்த ரத்தப் பரிசோதனைகள் செய்யப்படும். ரத்தத்தில் உள்ள நோய்த்தொற்று, மூளைக்குச் செல்வதைத் தடுக்கும் தடுப்பான Blood-brain barrier பச்சிளம் குழந்தைகளில் போதுமான வளர்ச்சி அடைந்திராத காரணத்தினால், குழந்தைக்கு நோய்த்தொற்று இருந்தால், மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகமாகும்.
எனவே, செப்சிஸ் இருக்கும்பட்சத்தில் Lumbar Puncture (அடிமுதுகுத் துளையிடுதல்) செய்யப்பட்டு, மூளை தண்டுவட திரவம் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை மூலம் மூளைக்காய்ச்சல் இருக்கிறதா என்பது உறுதிப்படுத்தப்படும். செப்சிஸ் எந்த வகை என்பதைப் பொறுத்து, எத்தனை நாள் ரத்தநாள வழியாக ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். உதாரணமாக, ரத்ததில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் 14 நாள்களும், மூளைக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் 21 நாள்களும் ரத்த நாளம் வழியாக ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படும்.

பச்சிளம் குழந்தைகளில், நோய்த்தொற்றினால் தீவிர பாதிப்புகள் மட்டுமல்லாது மரணம் கூட நிகழ அபாயம் அதிகம். எனவே, நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது மிகமிக முக்கியம். பிரசவ அறை, அறுவை சிகிச்சை அறை, பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு என அனைத்து பகுதிகளிலும் நோய்த்தடுப்பு வழிமுறைகளை (asepsis) சரிவர பின்பற்றும் மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளில் ஏற்படும் நோய்த்தொற்று விகிதம் மிக குறைவாக இருக்கும். அதைப்போல், குழந்தையைத் தொடும் முன், சானிட்டைசர் அல்லது சோப்பு கொண்டு உங்கள் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்; அதன் மூலம், குழந்தைக்கு உங்கள் கைகளில் உள்ள நுண்ணுயிர் கிருமிகளால் குழந்தைக்கு ஏற்படும் நோய்த்தொற்று அபாயம் குறைந்துவிடும். 1847-ல் மருத்துவர் Ignaz Semmelweis அறிமுகப்படுத்திய hand-washing, பல லட்சக்கணக்கான நோய்த்தொற்றுகளைத் தடுத்துள்ளது. எனவே தான், அவர் ‘Father of Hand Hygiene’ என்றழைக்கப்படுகிறார். முறையாக கை கழுவதல், சுத்தமான துணிகளை அணிவித்தல், பிறந்த 7-10 நாள்களிலிருந்து குழந்தையை சரியாக குளிப்பாட்டுதல் போன்றவை மூலம் குழந்தைக்கு நோய்த்தொற்று அபாயத்தைக் குறைத்திடலாம்.
பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல்:
பிறந்த குழந்தைகளில் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு, நிமோனியா, சுவாசக் கோளாறு நோய்க்குறி, பச்சிளங்குழந்தைகளின் நிலையற்ற மூச்சிரைப்பு, மெக்கோனியம் ஆஸ்பிரேஷன் சிண்ட்ரோம் என்று பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் நிமோனியா, பச்சிளம் குழந்தைகளில் ஏற்படும் நோய்த்தொற்றினால் ஏற்படுகிறது. நிமோனியா உறுதிப்படுத்தப்பட்டால், ரத்த நாளம் வழியாக ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படும்.
மெக்கோனியம் ஆஸ்பிரேஷன் சிண்ட்ரோம்: குழந்தைக்கு தாயிலிருந்து தொப்புள்கொடி மூலம் கிடைக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும்போது, கர்ப்பப்பையில் இருக்கும்போதே, குழந்தை மலம் (meconium) கழித்து விடும். இந்த மெக்கோனியம் பனிக்குட நீருடன் கலந்து, அந்த நீரை குழந்தை சுவாசிப்பதால், மூச்சுத்திணறல் ஏற்படும். இதனை மெக்கோனியம் ஆஸ்பிரேஷன் சிண்ட்ரோம் (Meconium Aspiration Syndrome) என்போம்.

சுவாசக் கோளாறு நோய்க்குறி
நுரையீரலில் உள்ள மூச்சுச் சிற்றரைகளை (alveoli) விரிவடையச் செய்ய Surfactant (சர்ஃபேக்டன்ட்) அவசியமாகும். இந்த Surfactant உற்பத்தி 20-24வது வார கர்ப்பகாலத்தில் இருந்து தொடங்கி, அதன்பின் அதிகரிக்கத் தொடங்கும். 34-வது வாரத்தின் போது, குழந்தை இயல்பாக சுவாசிப்பதற்கு போதுமான Surfactant இருக்கும். குறைமாத்தில் பிறக்கும் குழந்தைகளில், போதுமான நுரையீரல் வளர்ச்சி மற்றும் சர்ஃபேக்டன்ட் உற்பத்தி இல்லாத காரணத்தால் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படலாம். இதனை ‘Respiratory Distress Syndrome’ (சுவாசக் கோளாறு நோய்க்குறி) என்போம். குறைப்பிரசவ அபாயம் உள்ள தாய்மார்களுக்கு, Antenatal corticosteroids ஊசிகள் போடப்படும். அதனால், நுரையீரல் வளர்ச்சி மற்றும் சர்ஃபேக்டன்ட் உற்பத்தி அதிகரிக்கும். குறைமாத பச்சிளங்குழந்தைகளில், சுவாசக் கோளாறு நோய்க்குறி தீவிரமாக இருந்தால், செயற்கை சர்ஃபேக்டன்ட் செலுத்தப்படும்.
பச்சிளங்குழந்தைகளின் நிலையற்ற மூச்சிரைப்பு
பிரசவத்தின்போது, குழந்தையின் நுரையீரலிலுள்ள நீர், Glucocorticoids மற்றும் Catecholamines அதிகரிப்பால், உறிஞ்சப்படும். அவ்வாறு உறிஞ்சப்படவில்லை என்றால், பிறந்தபிறகு, அதிகளவு மூச்சிரைப்புடன் (ஒரு நிமிடத்திற்கு, சுவாச விகிதம் 60-க்கு மேல் இருக்கும்), மூச்சுத்திணறல் ஏற்படும். இதனை ‘Transient Tachypnea of the Newborn’ (பச்சிளங்குழந்தைகளின் நிலையற்ற மூச்சிரைப்பு). குறைமாத பிரசவத்தில் பிறக்கும் 1% குழந்தைகளிலும், நிறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 0.3-0.6% குழந்தைகளிலும் ‘பச்சிளங்குழந்தைகளின் நிலையற்ற மூச்சிரைப்பு’ காணப்படுகிறது. சிசேரியன் டெலிவரி மற்றும் குறைமாத பிரசவத்தின்போது, சுகப்பிரசவத்தில் நிகழ்வது போல் ஹார்மோன் அதிகரிப்பு நடைபெறாததால், பச்சிளங்குழந்தைகளின் நிலையற்ற மூச்சிரைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனினும், பெரும்பாலாலான நேரங்களில், சில மணிநேரம் ஆக்ஸிஜன் கிடைத்திட, மூச்சுத்திணறல் சரியாகிவிடும்.

பச்சிளங்குழந்தைகளில், மூச்சுத்திணறலுக்குரிய காரணம் கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் மார்பு எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படும். மூச்சுத்திணறல் தீவிரத்தைப் பொறுத்து, ஆக்ஸிஜன், CPAP அல்லது வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் போன்றவை கொடுக்கப்படும். குறைமாத பச்சிளங்குழந்தைகளில் சுவாசக் கோளாறு நோய்க்குறி தீவிரமாக இருந்தால், செயற்கை சர்ஃபேக்டன்ட் செலுத்துவதன் மூலம் சரிப்படுத்த முடியுமென்பதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் NICU-வில், சர்ஃபேக்டன்ட் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
முற்றும்.
மேலும் படிக்க குழந்தைகளை பாதிக்கும் நோய்த்தொற்று… தடுப்பது எப்படி? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 35