4.5 ஏக்கர்... 4 மாதங்கள், ரூ.1,60,000... லாபம் கொடுக்கும் பாரம்பர்ய நெல் சாகுபடி!

0

கடலூர் மாவட்டம், ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி சிவக்குமார். கடந்த பத்து ஆண்டு களுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், நான்கரை ஏக்கரில் வெள்ளைப் பொன்னி, கறுப்புக்கவுனி உள்ளிட்ட பாரம்பர்ய நெல் ரகங்கள் உற்பத்தி செய்து, அதை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார்.

இவருடைய அனுபவங்களை அறிந்து கொள்ள ஒரு காலைப்பொழுதில் இவரைச் சந்திக்கச் சென்றோம். இவருடைய வீடும் பண்ணையும் ஒருங்கிணைந்து அமைந் துள்ளன. வரப்பில் நடைபோட்டவாறு, நெற்பயிர்களைப் பார்வையிட்டுக் கொண் டிருந்த சிவக்குமார், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். ‘‘என்னைப் பொறுத்தவரைக்கும் விவசாயப் பூமி, வீடு, கோயில் எல்லாமே ஒண்ணுதான். அதனாலதான் என்னோட பண்ணைக்கு ‘உழவாலயம்’னு பேர் வச்சிருக்கேன்’’ என நெகிழ்ச்சியோடு பேசத் தொடங்கியவர், தன்னைப் பற்றிய தகவல்களையும், தன்னுடைய விவசாய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

அரிசியுடன்

‘‘நாங்க விவசாய குடும்பம். எங்களுக்கு 12 ஏக்கர் நிலம் இருக்கு. என்னோட அப்பா, ஊராட்சி ஒன்றியத்துல பொறியாளரா வேலை பார்த்துக்கிட்டே விவசாயத்தையும் கவனிச்சுக்கிட்டாரு. எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் உண்டு. ஆனா, முழுநேர விவசாயியா ஆகணும்ங்கற எண்ணமெல்லாம் கிடையாது. பள்ளிப் படிப்பை முடிச்சதும் இளநிலை வரலாறு பட்டப்படிப்பு படிச்சுட்டு, சென்னையில உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல்ல மேனேஜரா சில வருஷங்கள் வேலை பார்த்தேன். அப்ப எனக்கு உணவு தயாரிப்பு தொழில்ல ஈடுபாடு வந்ததுனால, அந்த வேலையைக் கைவிட்டுட்டு, ஆந்திராவுல ஓ.என்.ஜி.சி நிறுவனத்துல ஒப்பந்த அடிப்படையில கேன்டீன் நடத்தினேன். 1992-ம் வருஷம், என்னோட அப்பா மரணம் அடைஞ்சதுனால, சொந்த ஊருக்கு நிரந்தரமா திரும்பி வந்து, விவசாயத்தைக் கவனிக்க ஆரம்பிச்சேன். 2010-ம் வருஷம் வரைக்கும் எங்களுக்குச் சொந்தமான 12 ஏக்கர்லயுமே நிறைய ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்திதான் விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தேன். என் நண்பரோட அப்பா குஞ்சுதபாதம்தான், ரசாயன உரங்களால ஏற்படும் பாதிப்புகள் பத்தி என்கிட்ட ரொம்பக் கவலையோடு பேச ஆரம்பிச்சார். அவர் பள்ளி ஆசிரியரா வேலை பார்த்துக்கிட்டே இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருந்தார். அதனால, அவரோட அனுபவபூர்வமான வார்த்தைகள் என்னை ரொம்பவே சிந்திக்க வச்சது. குறிப்பா, என்னோட பள்ளிகால வாழ்க்கையை நினைவுபடுத்துனுச்சு. திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறையில உள்ள ஶ்ரீராம கிருஷ்ணா தபோவனத்துலதான், நான் தங்கியிருந்து நான்காம் வகுப்புல இருந்து பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். அந்தக் காலகட்டத்துல இயற்கை விவசாயம்ங்கற சொல் அறிமுகமாகல. ஆனா, அந்த ஆசிரமத்துக்குச் சொந்தமான நிலத்துல ரசாயன இடுபொருள்கள் போடா மல்தான் நெல், காய்கறிகளை எல்லாம் பயிர் பண்ணுவாங்க. நிறைய மாடுகள் இருந்ததுனால, எருதான் பயன்படுத்துவாங்க. இயற்கை முறையில விளைவிக்கப்பட்ட கைக்குத்தல் அரிசி, காய்கறிகள் சாப்பிட்டு தான் வளர்ந்தேன்.

நெல் வயலில் சிவக்குமார்

என் நண்பரோட அப்பா குஞ்சுதபாதம், இயற்கை விவசாயத்தோட அவசியம் பத்தி பேச ஆரம்பிச்சதும் அதைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். இயற்கை விவசாயம் செய்யணும்னு முடிவெடுத்து, இதுக்கான பயிற்சிகள்ல கலந்துகிட்டு 2010-ம் வருஷம் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். பெரம்பலூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி மகேந்திர மணிவாசனோட வழிகாட்டுதல் எனக்கு நம்பிக்கையைத் தெளிவான புரிதலையும் கொடுத்துச்சு. இயற்கை இடுபொருள்களோட பயன்பாடு, அதைத் தயாரிக்கும் முறை, எந்தச் சமயத்துல எப்படிப் பயன்படுத்தணும்ங்கற நுட்பங்களை எல்லாம் ரொம்ப எளிமையா சொல்லிக் கொடுத்தார். குறிப்பா, இயற்கை இடுபொருள்கள் தயாரிப்புல சில புதிய வழிமுறைகள் சொல்லிக் கொடுத்தார்.

நாட்டுப்பசுவோட சிறுநீர் கலந்துதான் பஞ்சகவ்யா தயாரிக்கணும்ங்கறது அதை உருவாக்கிய டாக்டர் கொடுமுடி நடராஜனோட கருத்து. பஞ்சகவ்யாவை விவசாயிகள்கிட்ட பரவலா கொண்டு சேர்த்த நம்மாழ்வார் அய்யாவோட கருத்தும் அதுதான்.

ஆனா, மணிவாசன் இதை வேறொரு கோணத்துல அணுகுறார். மாட்டுச் சிறுநீர்ல யூரிக் அமிலம் இருக்கு. அதைச் சாணத்தோடு கலந்தால், சாணத்துல உள்ள நுண்ணுயிரிகள் அழிஞ்சு போகுறதுக்கான வாய்ப்புகள் அதிகம்னு மணிவாசன் சொல்றார். ஜீவாமிர்தம் தயாரிக்குறதுக்கும்கூட மாட்டுச் சிறுநீர் பயன்படுத்தக் கூடாதுங்கறது அவரோட கருத்து. அதுல எனக்கும் உடன்பாடு உண்டு. அதனால, அவரோட வழிகாட்டுதல்படி மாட்டுச் சிறுநீர் தவிர்த்துட்டு... பஞ்சகவ்யாவும், ஜீவாமிர்தம் தயார் பண்ணிப் பயன்படுத்திக் கிட்டு இருக்கேன்.

எங்க குடும்பத்துக்கு மொத்தம் 12 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல நாலரை ஏக்கர்ல மட்டும் இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். குறுவை பட்டத்துல நவீன நெல் ரகங்களும், பாரம்பர்ய நெல் ரகங்களும் கலந்து பயிர் பண்ணுவேன். சம்பா பட்டத்துல நாலரை ஏக்கர்லயுமே பாரம்பர்ய நெல் ரகங்கள் மட்டும் பயிர் பண்ணுவேன்’’ என்று சொன்னவர், வெள்ளைப் பொன்னி மற்றும் கறுப்புக் கவுனி சாகுபடி அனுபவம் குறித்து விவரித்தார்.

எடை போடும் பணி

‘‘சம்பா பட்டத்துல 3.25 ஏக்கர்ல வெள்ளைப் பொன்னியும், 1.25 ஏக்கர்ல கறுப்புக் கவுனியும் சாகுபடி செய்றதை வழக்கமா கடைப்பிடிக்குறேன். விற்பனை வாய்ப்புக்கு ஏற்ப இதைத் திட்டமிட்டுருக் கேன். இந்த இரண்டு ரகங்களுக்குமே ஒரே மாதிரியான செயல்முறைகள்தான் கடைப் பிடிக்கிறேன்.

வெள்ளைப் பொன்னி...

வெள்ளைப் பொன்னியைப் பொறுத்த வரைக்கும் ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை (60 கிலோ) வீதம் 3.25 ஏக்கர்ல 3,900 கிலோ மகசூல் கிடைக்குது. அதுல 300 கிலோவை விதைநெல்லுக்காக எடுத்து வச்சுக்குவேன். என்னோட தேவைக்குப் போக மீதியுள்ளதை, மற்ற விவசாயிகளுக்கு ஒரு கிலோ 60 ரூபாய்னு விற்பனை செய்வேன். 300 கிலோ விதை நெல்லோட விலைமதிப்பு 18,000 ரூபாய். 3,600 கிலோ நெல்லை அரிசியா மதிப்புக்கூட்டினா 2,160 கிலோ அரிசி கிடைக்கும்.

வெள்ளைப் பொன்னி அரிசி ஒரு கிலோ 80 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதுமூலமா 1,72,800 ரூபாய் வருமானம் கிடைக்குது. வைக்கோல் விலை மதிப்பு 10,000 ரூபாய். ஆக 3.25 ஏக்கர் வெள்ளைப்பொன்னி சாகுபடி மூலம், மொத்தம் 2,00,800 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதில் சாகுபடி, செலவுகள், அரவைக்கூலி உட்பட 1,05,000 ரூபாய் போக, 95,800 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

அரவை பணியில்

கறுப்புக் கவுனி...

கறுப்புக் கவுனி சாகுபடியில ஒரு ஏக்கருக்கு 14 மூட்டை (60 கிலோ) வீதம், 1.25 ஏக்கர்ல 1,050 கிலோ நெல் மகசூல் கிடைக்குது. இதுல 50 கிலோவை விதைநெல்லுக்கு எடுத்து வச்சுக்குவேன். என்னோட தேவைக்குப் போக மீதியுள்ளதை, ஒரு கிலோ 100 ரூபாய்னு விற்பனை செய்வேன். 50 கிலோ விதை நெல்லோட விலைமதிப்பு 5,000 ரூபாய். 1,000 கிலோ நெல்லை அரிசியா, அரைச்சோம்னா, 600 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ கறுப்புக் கவுனி அரிசி, 160 ரூபாய்னு விற்பனை செய்றேன். 600 கிலோ அரிசி விற்பனை மூலம், 96,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். வைக்கோல் விலைமதிப்பு 3,000 ரூபாய். 1.25 ஏக்கர் கறுப்புக் கவுனி சாகுபடி மூலம், மொத்தம் 1,04,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். செலவுகள் போக, 64,250 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஆக மொத்தம் 4.5 ஏக்கரில் பயிர் செய்யப் படும் வெள்ளைப் பொன்னி, கறுப்புக் கவுனி மூலம், 1,60,050 ரூபாய் லாபம் கிடைக்கும்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, சிவகுமார்,

செல்போன்: 99940 10945

மாட்டுச் சிறுநீர் இல்லாத பஞ்சகவ்யா

மாட்டுச் சிறுநீர்
இல்லாமல் பஞ்சகவ்யா

மாட்டுச் சிறுநீர் சேர்க்காமல் பஞ்சகவ்யா தயார் செய்ய சிவக்குமார் கடைப்பிடிக்கும் செயல்முறைகள்:

நன்கு ஆரோக்கியமாக உள்ள பசு மாடு போட்ட புது சாணம் 7 கிலோ. இவற்றுடன் 1 கிலோ நெய்யைக் கலந்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். இக்கலவையுடன் 3-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரும் 1 கிலோ வெல்லம் கலந்து நன்கு கலக்கி விட வேண்டும். 5-ம் நாள் 2 லிட்டர் பால், 2 லிட்டர் தயிர் சேர்த்துக் கலக்க வேண்டும். 7-ம் நாள் 3 லிட்டர் இளநீரும், 9-ம் நாள் 3 கிலோ வாழைப்பழமும், 11-ம் நாள் 3 கிலோ பப்பாளிப்பழமும், 13-ம் நாள் 10 லிட்டர் தண்ணீர், 1 கிலோ வெல்லமும் கலந்து நன்கு கலக்கிவிட்டு மூடி வைக்க வேண்டும். அடுத்த 21 நாள்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.

மாட்டுச் சிறுநீர்
கலக்காமல் ஜீவாமிர்தம்

மாட்டுச் சிறுநீர் கலக்காமல் ஜீவாமிர்தம் தயார் செய்ய சிவக்குமார் கடைப்பிடிக்குச் செயல்முறை...

10 கிலோ பசுஞ்சாணத்துடன் 2 கிலோ வெல்லம், 2 கிலோ முளைக்கட்டிய பச்சைப் பயறு, 5 லிட்டர் புளித்தத் தயிர் இவற்றை ஒன்றாகக் கலந்து, இவற்றுடன் 50 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கலக்க வேண்டும். மறுநாள் 150 லிட்டர் தண்ணீர் கலந்து மூடி வைக்க வேண்டும். தினம்தோறும் நன்கு கலக்கிவிட்டு மூடி விட வேண்டும். 7-ம் நாள் ஜீவாமிர்தம் தயாராகிவிடும்.

நெல் வயல்

பப்பாளி கலந்த
மீன் கரைசல் தயாரித்தல்...

தலா 5 கிலோ மீன் கழிவு, வெல்லம், பப்பாளிப்பழம் இவற்றை ஒன்றாக நன்கு கலந்து, 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும். 10-ம் நாளிலிருந்து தினமும் கலக்கி விட வேண்டும். 45-ம் நாள் மீன் கரைசல் தயாராகிவிடும்.

இப்படித்தான் சாகுபடி

ஒரு ஏக்கரில் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்ய சிவக்குமார் சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

நாற்று உற்பத்தி...

நாற்றுகள் உற்பத்தி செய்வதற்கான பிளாஸ்டிக் டிரேக்களில் சேறு நிரப்பி, 20 கிலோ விதைநெல்லை தூவ வேண்டும். டிரேக்களின் மீது பச்சை நிற நிழல் வலையை விரித்து, பூவாளி மூலம் தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். 7-ம் நாள் நிழல் வலையை எடுத்து விட வேண்டும். 9 மற்றும் 15-ம் நாள் 15 லிட்டர் தண்ணீரில் தலா 50 மி.லி பஞ்சகவ்யா, மீன் கரைசல், எண்ணெய் கலவை (வேப்ப எண்ணெய், புங்க எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்திருக்க வேண்டும்) ஆகியவற்றைக் கலந்து நாற்றுகள் மீது தெளிக்க வேண்டும். 20-ம் நாள் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும்.

நெல் வயல்

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி, 50 கிலோ பலதானிய விதைப்புச் செய்ய வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பல தானிய விதைப்புச் செய்வது தான் வழக்கம். மண்ணுக்குத் தேவையான சத்துகள் விரைவாகவும் நிறைவாகவும் கிடைக்க, 50 கிலோ விதைப்புச் செய்யலாம். 25-ம் நாள் பலதானிய பயிர்களை மடக்கி சேத்துழவு செய்ய வேண்டும் (இளம் தண்டுகளாக இருக்கும்போதே மடக்கி உழவு செய்வது மிகவும் அவசியம். காலதாமதம் செய்தால் தண்டுகள் முற்றிவிடும். அவை மட்குவதற்கு நீண்ட நாள்கள் ஆகும்). ஒரு வாரம் கழித்து மீண்டும் சேத்துழவு செய்து, நிலத்தைச் சமப்படுத்தி, இயந்திரம் மூலம்... வரிசைக்கு வரிசை 1 அடி, குத்துக்குக் குத்து அரையடி இடைவெளி விட்டு, 4 - 5 நாற்றுகள் வீதம் நடவு செய்ய வேண்டும். 10-ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். இதுபோல் 15 நாள்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும். மொத்தம் நான்கு முறை ஜீவாமிர்தம் கொடுத்தால் போதுமானது. 20, 30, 40 ஆகிய நாள்களில் 15 லிட்டர் தண்ணீருக்கு தலா 1.5 லிட்டர் பஞ்சகவ்யா, மீன் கரைசல், 500 மி.லி எண்ணெய் கலவை ஆகியவற்றைக் கலந்து பயிர்கள் மீது தெளிக்க வேண்டும். தேவைக்கேற்ப களை எடுக்க வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அவ்வப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்ததிலிருந்து 115 - 120 நாள்களில் வெள்ளைப்பொன்னி, கறுப்புக் கவுனி ஆகிய நெற்பயிர்கள் அறுவடைக்கு வரும்.

மாட்டுச் சிறுநீரால் பாதிப்பு இல்லை!

பஞ்சகவ்யா தயாரிக்க மாட்டுச் சிறுநீர் பயன்படுத்தினால் நுண்ணுயிரிகள் அழிந்துவிடுமா?

விவசாயி சிவக்குமாரின் கருத்து குறித்து, பயிர்களுக்குப் பயன்படுத்தும் வகையில் பஞ்சகவ்யாவை உருவாக்கிய டாக்டர் கொடுமுடி நடராஜனிடம் விளக்கம் கேட்டோம். ‘‘பஞ்சகவ்யா தயாரிப்பில் பசுமாட்டுச் சிறுநீர் மிகவும் அவசியமானது. இதில் நைட்ரஜன், பொட்டாஷ், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. பஞ்சகவ்யா குறித்து, கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஏற்கெனவே ஆய்வு மேற்கொண்டது. பசுமாட்டுச் சிறுநீர் கலப்பதால் நுண்ணுயிரிகள் அழிந்து போவதற்கான வாய்ப்பு இருப்பதாக, அந்த ஆய்வு முடிவில் சொல்லப்படவில்லை.

பஞ்சகவ்யா மிகச் சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி என வேளாண் பல்கலைக்கழகமே விவசாயிகளிடம் பரிந்துரை செய்து வருகிறது. பொதுவாக, மாட்டுச்சிறுநீரில் யூரிக் அமிலம் இருப்பதால், அது மற்ற பொருள்களில் உள்ள நுண்ணுயிர்களை அழித்துவிட வாய்ப்பிருப்பதாகச் சிலர் கருதலாம். மாட்டுச் சிறுநீரை மட்டும் தனியாகப் பயிர்களுக்குத் தெளித்தால் பாதிப்புகள் ஏற்படும். பஞ்சகவ்யா தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மற்ற பொருள்களுடன் மாட்டுச்சிறுநீர் மிகவும் குறைவான அளவு மட்டுமே சேர்க்கப்படுவதால், நுண்ணுயிர்களை அழிப்பதற்கான வாய்ப்பில்லை. பயிர்களுக்கு மாட்டுச் சிறுநீர் தெளிப்பதென்பது, தமிழக விவசாயிகள் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் வழக்கம்தான். பூச்சி, நோய்ப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, 20 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி மாட்டுச்சிறுநீர் கலந்து ஒரு ஏக்கருக்குத் தெளிக்கலாம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படும்’’ எனத் தெரிவித்தார்.

தொடர்புக்கு, டாக்டர் நடராஜன், செல்போன்: 94433 58379.

நடராஜன், சோமசுந்தரம்

பரிசோதனை செய்ய வேண்டும்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி சோமசுந்தரத்திடம் பேசினோம். “பஞ்சகவ்யாவில் மாட்டுச் சிறுநீர் கலக்காமல் பயன்படுத்தினால் பஞ்சகவ்யாவின் அமிலத்தன்மை பாதிக்கப்படும். அதேபோன்று மாட்டுச் சிறுநீர் மூலம் பஞ்சகவ்யாவில் சேர்கின்ற சத்துகள் பயிர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால், பஞ்சகவ்யா தயாரிப்பு என்பதே பாரம்பர்ய அறிவியல் சம்பந்தப்பட்டது. நெய்க்குப் பதிலாக பிண்ணாக்கு பயன்படுத்தியதும் நடந்திருக்கிறது. அதுபோன்று மாட்டுச் சிறுநீர் பயன்படுத்தாமல் இதுபோன்ற பஞ்சகவ்யா தயாரிப்பதை தப்பென்று சொல்ல முடியாது. எந்தவொரு இடுபொருளும் மகசூல் கொடுக்க வேண்டும். அதுதான் அடிப்படை. மாட்டுச் சிறுநீர் இல்லாமல் தயாரிக்கும் பஞ்சகவ்யாவை ஆய்வு செய்தால் மட்டுமே முழுமையான தகவல் கிடைக்கும்” என்றார்.


மேலும் படிக்க 4.5 ஏக்கர்... 4 மாதங்கள், ரூ.1,60,000... லாபம் கொடுக்கும் பாரம்பர்ய நெல் சாகுபடி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top