சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கிறது. இதனால் ரஜினிகாந்த், இமயமலை, ஜார்க்கண்ட் உட்பட வடமாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன் தினம் இரவு ரஜினிகாந்த் லக்னோ வந்திருந்தார். அவர் உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத்துடன் சேர்ந்து ஜெயிலர் படத்தை பார்த்தார். படத்தின் சிறப்பு காட்சியை காண ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்தும் வந்திருந்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த கேசவ் பிரசாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் பல படங்களை பார்த்திருக்கிறேன். அவர் சிறந்த நடிகர்.

படத்தில் கதை பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அவர் தனது நடிப்பால் படத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறார்'' என்று தெரிவித்தார்.
பின்னர், நேற்று மாலையில் ரஜினிகாந்த் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இல்லத்திற்கு சென்றார். அங்கு சென்றவுடன் யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு ரஜினிகாந்த் வணங்கினார். யோகி ஆதித்யநாத் ஏற்கனவே ஒரு மடாதிபதியாக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஆவார். ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலை தொட்டு வணங்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.
ஜெயிலர் வெற்றி பெற்றது குறித்தும், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருப்பது குறித்தும் ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ''படம் ஹிட்டானது கடவுளின் ஆசிர்வாதம்'' என்று மட்டும் தெரிவித்தார். உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலையும் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினார். ரஜினிகாந்த் அயோத்திக்கு சென்று ராமர் கோயிலில் வழிபடுகிறார். முன்னதாக ரஜினிகாந்த் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு வந்திருந்தார். அங்குள்ள பிரபலமான சின்னமஸ்தா கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

அதோடு ராஞ்சியில் உள்ள யசோதா ஆசிரமத்திற்கு சென்று ஒரு மணி நேரம் தியான மண்டபத்தில் ரஜினிகாந்த் தியானம் இருந்தார். பின்னர் அம்மாநில ராஜ்பவனுக்கு சென்று மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இருவரும் தமிழகம் மற்றும் மத்திய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தெரிகிறது.
மேலும் படிக்க `ஜெயிலர் ஹிட்டானது கடவுள் ஆசீர்வாதம்!’ - உ.பி முதல்வர் யோகியின் காலை தொட்டு வணங்கிய ரஜினிகாந்த்!