சிஏஜி அறிக்கையும் மோசடிக்கான கணக்குகளும்! - ஆயுதமாக்கும் எதிர்க்கட்சிகள்?!

0

‘வாரிசு அரசியல்... ஊழல்...’ என்று இரண்டு பிரதான விஷயங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகளை விமர்சித்தும், குற்றம்சாட்டியும் அரசியல் முன்னெடுப்புகளை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இதற்கான பலனாக பல மாநிலங்களில் ஆட்சியையும் கைபற்றியது. இன்னும் சொல்ல போனால், 2004 - 2014 ஆகிய பத்து ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை வீழ்த்துவதற்கான ஆயுதமாகவும் ஊழலை முன் வைத்தது பாஜக. அந்த சமயத்தில், 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிஏஜி வெளியிட்ட அறிக்கைதான் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜக ஆட்சியை பிடிக்க முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. அன்று சிஏஜி அறிக்கையை கையிலெடுத்த பாஜக 1,76,000 கோடி ஊழல் என மிகப்பெரிய அளவில் பிரசாரம் செய்து பலனையும் அறுவடை செய்தது.

சோனியா, மன்மோகன் சிங்,

அதேபோல், இப்போது வெளியாகியிருக்கும் சிஏஜி-யின் அறிக்கையினை காங்கிரஸ் கையிலெடுத்து பாஜக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இருப்பினும் இதை தொடர்ச்சியாக எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கொண்டு செல்லும் என்பதை பொறுத்தும், அதற்கு பாஜக ஆற்றும் எதிர்வினையை பொறுத்தும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதன் தாக்கத்தை எதிர்பார்க்க முடியும். அந்த வகையில் கடந்த ஒன்பது ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியில் ஏழு திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாரத் மாலா திட்டம்

அதன்படி, மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தில், ஏலம் விடுதலில் முறைகேடு; துவாரகா விரைவுப்பாதை கட்டுமானத்தில், ஒரு கிலோ மீட்டருக்கு திட்டச்செலவான 18 கோடி ரூபாயில் இருந்து 250 கோடி ரூபாய் செலவழித்தது ஏன் என்பது கணக்கு தணிக்கைக்குழுவின் கேள்வியாக உள்ளது; இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் 132 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஏழரை லட்சம் பயனாளிகளின் விவரங்கள், ஒரே தொலைபேசி எண்ணில் இணைக்கப்பட்டுள்ளது; அயோத்யா மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்குத் தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது; கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பணம், மத்திய அரசின் விளம்பரங்களுக்காக செலவழிக்கப்பட்டது; ஹ்ச்.ஏ.எல் விமான எஞ்சின் வடிவமைப்பில் தவறு செய்த வகையில் 154 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து நம்மிடம் பேசிய திமுக மாணவரணி மாநில துணை செயலாளர் தமிழ் கா.அமுதரசன், “பாஜக என்றாலே அதன் மறுபெயர் ஊழல் என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். இதுவரை யோக்கிய சிகாமணியாக முழு பூசணிக்காயை சோற்றி மறைப்பது போல் ரஃபேல் ஊழல், வியாபம் ஊழல், பெகாசஸ், 5-ஜி என தொடர்ந்து செய்து வருகிறார்கள். பணமதிப்பிழப்பு காலத்தில் 30% கமிஷன் எடுத்தார்கள் என்பது தெரியும். அதில் அமித் ஷா எந்த கூட்டுறவு வங்கியின் இயக்குனராக இருந்தாரோ அதில்தான் அதிகமகா பண பரிவர்த்தனை நடந்தது என்பதையும் அறிக்கையாக வெளியிட்டிருந்தார்கள். இவ்வாறாக தொடர்ந்து இவர்கள் செய்து வந்திருந்ததை சொல்லி வந்த வேளையில் அதற்கு வலு சேர்க்கும் விதமாக இப்போது, ஏழு திட்டங்களில் ஏழு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ஊழல் செய்திருப்பது சிஏஜி அறிக்கை மூலம் வெளியாகியிருக்கிறது.

தமிழ் கா.அமுதரசன் - திமுக

மணிப்பூரில் எப்படி பாரத மாதாவை கொலை செய்தார்களோ, அதேபோல் ‘பாரத், தேச பக்தி’ என காண்பித்து, அதை வியாபாரமாக்கி கார்ப்பரேட் நலனுக்காக செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கி.மீ-க்கு 18 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய இடத்தில் 250 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், அந்த இடத்தில் என்ன தங்கத்தை காய்ச்சி தார் முலாம் பூசினார்களா என்கிற கேள்வி எழுகிறது. உத்திர பிரதேசத்தில் ‘எக்ஸ்பிரஸ் வே’ என்று மோடி திறந்து வைத்த அந்த சாலை ஒரே நாளில் மழையில் அடித்து சென்றது. அதேபோல் கர்நாடகவிலும் அவர் திறந்து வைத்த பெங்களூர், மைசூர் ஹைவே ஒரு வாரத்தில் மழையில் எந்தளவு நீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறியது என்பது எல்லாம் தெரியும்.

மதுரை எய்ம்ஸ் போலவே பீகாரின் நிலை என்ன என்பதை பார்த்தோம். இதன் மூலமாக பிரதமர் மோடியின் ஊழல் எந்த அளவு இருக்கிறது என்பது அம்பலமாகிறது. தனக்கு யாரும் இல்லை. எல்லாம் நாட்டுக்காகத்தான் என்று சொல்லி கொண்டிருக்கும் மோடி இப்படி கொள்ளையடிக்கும் பணத்தை யாருக்காக கொடுக்கிறார். இப்போது வெளியாகியிருக்கும் இந்த சிஏஜி அறிக்கை தேர்தல் களத்தில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள்

ஏற்கனவே பாஜக மீது மிகப்பெரியளவில் நாடு முழுவதும் அதிருப்தி இருக்கிறது. அதோடு பாஜக-வின் கொள்ளைப்புற, குதிரை பேர அரசியலை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாஜக-வின் ஆயுதம் மதவெறி அரசியல் என்கிற புரிதலும் மக்களிடம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக-வை மட்டும்தான் லீசுக்கு எடுத்து வைத்திருக்கிறார்களே தவிர மற்றப்படி, அவர்களின் கணக்குகள் எல்லாம் தமிழ்நாட்டில் இந்த தேர்தலோடு மூடப்படும். இவ்வாறாக ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக-வின் நிலை பரிதாபமாக இருக்கிறது. இப்போது பாஜக மீது மக்களிடம் இருக்கும் அதிருப்தியோடு இந்த ஊழல் பற்றிய பிரசாரம் தீவிரமாக எடுத்து செல்ல வேண்டும் என்கிற பேச்சுவார்த்தைத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் எடுத்து செல்வார்கள். எனவே இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை” என்கிறார்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ் நாடு காங்கிரஸ் பொது செயலாளரும், செய்தி தொடர்பாளருமான லட்சிமி ராமச்சந்திரன், “2014-ல் ஒரு பெரிய தொகையை குறிப்பிட்டு ஊடகங்கள் எல்லாம் பெரிதாக்கின. இப்படி விற்றிருந்தால் இவ்வளவு லாபம் சம்பாதித்திருக்கலாம் என்று நோஷ்னல் கரப்ஷனாகத்தான் சிஏஜி கொடுத்திருந்தார்கள். அதன்படி 2-ஜி வழக்கு நீதிமன்றம் போனது. அப்படி ஒரு ஊழல் நடக்கவில்லை என்று தீர்ப்பும் வந்துவிட்டது. அப்போது பாஜக சொன்னதும் தவறு. அதை ஊடகங்கள் பெரிதாக்கியதும் தவறு என்பது நிரூபணமாகியுள்ளது. ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் அறிக்கை நோஷ்னல் கரப்ஷன் எல்லாம் கிடையாது. தெள்ளத் தெளிவாக நடந்த ஊழல்.

லட்சுமி ராமச்சந்திரன் - காங்கிரஸ்

அதன்படி பார்க்கும் போது 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சிகிச்சையின் போது இறந்த 88,670 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை பார்த்ததாக காப்பீடு பெறப்பட்டிருக்கிறது. 7.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டைகள் ஒரே செல்போன் எண்ணைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து வெறும் ஏழே ஆதார் அட்டை எண்களுடன் 4,761 காப்பீடு அட்டைகள் பதிவாகியுள்ளன.

அடுத்து துவாரகா நெடுஞ்சாலை ஊழல். நாட்டின் முதல் எட்டு வழி விரைவு சாலை என திட்டமிடப்பட்டு ஒரு கி.மீ தூரத்துக்கு 18 கோடி ஆகும் என்று தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், ஒரு கி.மீ 250 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். மங்கள்யான் என்று செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய மொத்த திட்டத்தின் செலவும் ரூ.500 கோடி. இந்த இரண்டு கி.மீ செலவில் செவ்வாய் கிரகத்துக்கே போய் வந்துவிடலாம். ஐந்து சுங்கச்சாவடிகளில் ரேண்டமாக சர்வே செய்ததில் ரூ.154 கோடி அளவிற்கு அதிக தொகையை வசூல் செய்திருக்கிறார்கள். டெல்லியிலிருந்து, மும்பை சென்றால் ரூ.6,000 டோலுக்கே செலவாகிறது. ஐந்து சுங்கச்சாவடிலேயே இப்படி என்றால், ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிட்டு பார்த்தால் அது பெரிய தொகையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பாரத் மாலா திட்டம்

பாரத் மாலா திட்டத்தின் மூலம் அமைச்சரவையின் ஒப்புதல்படி பார்த்தால் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க15.37 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, செலவு 32.17 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, முறைகேடாக இத்திட்டத்தின் நிதி இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்டத்துக்கான நிதியில் இருந்து, 19 மாவட்டங்களில் விளம்பரப்படுத்த தலா 5 விளம்பரப்பலகைகள் வைக்க 2.44 கோடி ரூபாய் பணத்தை ஓய்வூதிய திட்ட நிதியைக் கொண்டு செலவு செய்யப்பட்டுள்ளது. இது மிக மிக மோசமான செயல்.

இதேபோல், அயோத்யா மேம்பாடு திட்டத்தில், ஒப்பந்தாரர்களுக்கு பணி கொடுக்கும்போது குறிப்பிட்ட அளவு உத்தரவாதத் தொகையை செலுத்தி இருக்க வேண்டும். 62.17 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்த ஒரு ஒப்பந்ததாரர் உத்தரவாத தொகையாக 3.11 கோடி செலுத்த வேண்டிய நிலையில் வெறும் 1.86 கோடி மட்டுமே செலுத்தியுள்ளார்” என்று மத்திய அரசு திட்டங்களில் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியவரிடம், ‘இதை எவ்வாறு மக்களிடத்தில் கொண்டு செல்ல போகிறீர்கள். எதிர் வரும் தேர்தல்களில் இது பிரதிபலிக்குமா அல்லது நீர்த்து போகுமா’ என்கிற கேள்வியினை முன் வைத்தோம்.

அயோத்தி ராமர் கோயில் மாதிரிப் படம்

“நாங்கள் பேசுகிறோம். ஊடகங்கள் தான் கொண்டு செல்ல வேண்டும். இது மிகப்பெரிய ஊழல். எல்லாமே அடித்தட்டு மக்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஓய்வூதிய திட்டத்தில் எத்தனை விதவைகளுக்கு பென்சன் போய் சேர்ந்திருக்கும். சுங்கச்சாவடியில் இப்படி கொள்ளையடிக்கும் போது விலைவாசி உயர்வுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கிறதே. இதெல்லாம் மக்களை நேரடியாக பாதிக்க கூடிய விஷயம்” என்றவரிடம், ‘மத்திய அரசு திட்டங்களை நேரடியாக செயல்படுத்துவதில்லை. எங்களது வேலை நிதி ஒதுக்குவது. அந்தந்த மாநிலங்கள் தான் அதற்கான பொறுப்பு’ என்று பாஜக விளக்கமளிக்கிறார்களே’ என்கிற கேள்விக்கு, பதிலளித்த லட்சுமி ராமச்சந்திரன், “இந்த மோசடிகள் எங்கு அதிகம் நடந்திருக்கிறது என்று பார்த்தால், இவர்கள் டபுள் எஞ்சின் ஆட்சி என்று சொல்லும் பாஜக ஆளும் உத்திரபிரதேசத்தில் தான்” என்றார்.


மேலும் படிக்க சிஏஜி அறிக்கையும் மோசடிக்கான கணக்குகளும்! - ஆயுதமாக்கும் எதிர்க்கட்சிகள்?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top